உடலுக்கு உடற்பயிற்சி, விழாக்காலங்களின்போது ஒன்றுகூடல், கலகலப்பு என்று மூத்தோர் பலர் சிங்கப்பூரில் நிறைவான, அர்த்தமிக்க வாழ்க்கையை வாழ்கின்றனர்.
உடற்பயிற்சி செய்து துடிப்புடன் மூப்படைந்துவரும் மூத்தோர், வாம்போ துடிப்புமிக்க மூப்படைதல் நிலையத்தில் டிசம்பர் 23ஆம் தேதியன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 11 மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை நடைபெற்ற கொண்டாட்டங்களில் பிங்கோ, ஒரிகாமி போன்ற விளையாட்டுகளுடன் கிறிஸ்துமஸ் ‘கேரல்’ இசை அங்கமும் இடம்பெற்றன.
தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஹெங் சீ ஹாவ், சுற்றுப்புற, நீடித்த நிலைத்தன்மை அமைச்சின் நிரந்தரச் செயலாளர் ஸ்டேன்லி டோ இருவரும் கலந்துகொண்டு சிறப்பித்த இந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 80 பேர் பங்கேற்றனர்.
நிலையத்தின் நிர்வாகி ஜார்ஜ் டான், சான்டா குளோஸ் வேடமிட்டு, வந்தவர்களுக்குப் பரிசுப்பொருள்களை வழங்கினார்.
சுற்றுப்புற, நீடித்த நிலைத்தன்மை அமைச்சு நிகழ்ச்சியின்போது நன்கொடையையும் அளித்து தனது கடப்பாட்டை வெளிப்படுத்தியது.
‘நமக்கு நாமே பொறுப்பு’
பங்கேற்பாளர்களில் ஒருவரான திருவாட்டி லட்சுமி தேவி, 67, நிகழ்ச்சியால் மகிழ்ச்சி அடைந்ததாகத் தமிழ் முரசிடம் கூறினார்.
முன்னைய துணைக் காவல் அதிகாரியான (auxiliary police) திருவாட்டி லட்சுமி, தற்போது பணிப்பெண் ஒருவருடனும் இரு செல்ல நாய்க்குட்டிகளுடன் வசிக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
ஜூலை 2023ல் பக்கவாதத்திற்கு உள்ளான திருவாட்டி லட்சுமி, அதிலிருந்து படிப்படியாக மீண்டு வந்தார்.
“பக்கவாதத்தால் பாதிக்கப்படுமுன், என்னைச் சுற்றியுள்ளோரைப் பற்றி அதிகம் கவலைப்பட்டு என்னை நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன். ஆனால், எனது உடல்நலனுக்கும் மனநலனுக்கும் நானே பொறுப்பு என்ற பாடத்தைப் பக்கவாதம் கற்றுக்கொடுத்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.
பெற்றோர்களை மேலும் நல்ல முறையில் பார்த்துக்கொள்ள நினைக்கும் பெண்கள், குடும்பத்திற்காக மட்டும் வாழ்ந்து அமரர்களாகிய தாய் தந்தையரை நினைத்துப் பார்க்கும்போது அவர்களையும் உடற்பயிற்சி அழைத்துச் சென்றிருக்கலாமே என்ற வருத்தம் தமக்கு அவ்வப்போது ஏற்படுவதாகத் திருவாட்டி லட்சுமி கூறினார்.
“இக்காலத்து முதியவர்கள், படித்தவர்களாகவும் நவீன உலகில் வேலை செய்தவர்களாகும் உள்ளனர். நமக்குக் கூடுதல் விழிப்புணர்வு இருக்கவேண்டும். எனவே, என்னைப் போன்ற மூத்தோர், குறிப்பாக பெண்களை இத்தகைய நிலையங்களுக்கு வரும்படி கேட்டுக்கொள்கிறேன்,” என்றும் அவர் சொன்னார்.