கிறிஸ்துமஸ் பரிசுகளைத் திறந்து பார்த்த சில மணி நேரத்திற்குள் இளம் தாயார் அபர்ணா வைஷாக்கிற்குப் பிரசவ வலி ஏற்பட்டது.
டிசம்பர் 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவன்று திருவாட்டி அபர்ணா உடனே தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
வைஷாக் - அபர்ணா இணையருக்கு ஆகச் சிறந்த கிறிஸ்துமஸ் பரிசாக அமைந்தது, நள்ளிரவுவாக்கில் பிறந்த அழகிய பெண் குழந்தை.
அனுக்ரஹா என்று பெயர் சூட்டப்பட்ட குழந்தையின் இனிய மழலைச் சத்தம் மகப்பேற்று மருத்துவ அறையை நிரப்ப, அபர்ணா- வைஷாக் தம்பதியர் அன்புக்குரியோரின் வாழ்த்துகளைப் பெற்று இன்பமாய் கிறிஸ்துமஸ் நாளைக் கொண்டாடுகின்றனர்.
“என் மனைவி கருத்தரித்து 14 வாரங்கள் ஆன நிலையில், அபாயம் இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். ஆனால், இப்போது குழந்தை நல்லபடியாகப் பிறந்ததால் நிம்மதியாக உள்ளோம்,” என்றார் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒன்றின் தலைவராக உள்ள திரு வைஷாக்.
இவர்களுக்கு எற்கெனவே ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
தொழில்நுட்ப நிர்வாகியாகப் பணிபுரியும் திருவாட்டி அபர்ணாவும் திரு வைஷாக்கும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருந்தபோது சந்தித்து, 2016ல் திருமணம் செய்துகொண்டனர்.
கிறிஸ்துமஸ் நாளன்று பெண் குழந்தை பிறந்தது பெருமகிழ்ச்சி தருவதாக உள்ளது என்று அவர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
“சிறு வயதில் எங்களைச் சுற்றியிருந்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவர். இதனால் நாங்கள் கிறிஸ்துவர்கள் இல்லை என்றாலும் விழாக்கால உணர்வுடன் இணைவதற்காக எங்கள் வீட்டிலும் கொண்டாடத் தொடங்கினோம்,” என்றார் திரு வைஷாக்.