நம்பிக்கையின் ஒளியில் செயின்ட் ஜோசஃப் தேவாலய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

2 mins read
b2842219-6e72-43ea-a3c0-4284eac52760
செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் ஒன்றிணைந்து கிறிஸ்துமஸ் நாளன்று காலை, மக்கள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். - படம்: விஷ்ருதா நந்தகுமார்
multi-img1 of 2

அண்மையில் செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் அச்சுறுத்தல் சம்பவம் இடம்பெற்றபோதும், வியாழக்கிழமை (டிசம்பர் 25), கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அமைதியும் நம்பிக்கையும் நிறைந்த சூழலில் நடைபெற்றன.

பல குடும்பங்கள், குழந்தைகள், முதியவர்கள் ஒன்றிணைந்து கிறிஸ்துமஸ் நாளன்று (டிசம்பர் 25) காலையில் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

புக்கிட் தீமாவில் உள்ள செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் டிசம்பர் 21ஆம் தேதி சந்தேகத்துக்குரிய பொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருந்தாலும், தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் சிறப்பு சிறிதும் பாதிக்கப்படவில்லை.

தேவாலயத்தின் உள்ளே கிறிஸ்துமஸ் பாடல்கள் மெல்லிசையாய் ஒலித்துக் கொண்டிருக்க, மெழுகுவர்த்தி ஒளியில் வழிபாடு அமைதியாக நடைபெற்றது.

தன் ஐந்தாம் வயதிலிருந்து செயின்ட் ஜோசஃப் தேவாலயத்திற்கு வரும் கேத்லீன் டி லோர், 39, தம் இளைய மகளின் முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் குடும்பத்தினருடன் கொண்டாடினார்.

குடும்பத்தோடு கிறிஸ்துமஸ் கொண்டாடும் கேத்லீன் டி லோர், 39.
குடும்பத்தோடு கிறிஸ்துமஸ் கொண்டாடும் கேத்லீன் டி லோர், 39. - படம்: விஷ்ருதா நந்தகுமார்

இவ்வாண்டு ஜனவரி மாதம் பிறந்த இவரது இரண்டாம் மகள் தான்விஷா தாலியாவிற்கு இதுவே முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை.

தம் நான்கு வயது மகள் காவிஷா கேசியாவுக்கும் ஒரு வயதை எட்டவிருக்கும் இரண்டாவது மகளுக்கும் ஒரே மாதிரியான ஆடைகளை அணிவித்து, கணவர், தாயாருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் அவர் ஈடுபட்டார்.

“பாலர் பள்ளி, தொடக்கப்பள்ளியென என் இளம் பருவம் முழுவதையும் இந்த இடத்தில்தான் கழித்தேன்,” என்று நினைவுகூர்ந்தார் கேத்லீன்.

“கணவர் இந்துவாக இருந்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து அனைத்துப் பண்டிகைகளையும் கொண்டாடுவோம்,” என்றும் அவர் கூறினார்.

செங்காங்கிலிருந்தாலும் கிறிஸ்துமஸ், ஈஸ்டர் திருநாளென அனைத்துப் பண்டிகைகளுக்குத் தம் மகளின் குடும்பம் புக்கிட் தீமாவில் உள்ள செயின்ட் ஜோசஃப் தேவாலயத்திற்கு வந்து தம்மோடு கிறிஸ்துமஸ் கொண்டாடுவர் என மகிழ்ச்சியோடு தெரிவித்தார் அசந்தா மேரி, 72.

செயின்ட் ஜோசஃப் தேவாலயம் தம் மனத்திற்கு மிக நெருக்கமான இடம் என்று கூறிய அவர், “1973ல் நான் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தேன். அன்று முதல் எனக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது இந்தத் தேவாலயம்தான்,” என்றார்.

“சிங்கப்பூரின் ஆகப் பழமையான தேவாலயங்களில் இதுவும் ஒன்று,” என்று அந்தத் தேவாலயத்தின் சிறப்பை விளக்கினார் 2000களிலிருந்து செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் வழிபட்டு வரும் கிருஷ்ணராஜ், 46.

அச்சுறுத்தும் சம்பவங்கள் நிகழ்வது இயல்பு என்றும் அவற்றுக்கு அப்பாலும் தொடர்ந்து அனைவரும் ஒற்றுமையாகப் பிரார்த்தனை செய்வது ஆனந்தத்தையும் மன நிம்மதியையும் கொடுக்கிறது என்றும் அவர் தமிழ் முரசிடம் குறிப்பிட்டார்.

நம்பிக்கையையும் ஒற்றுமையையும் வலுவாக நிலைநிறுத்தும் வண்ணம் செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் பிரார்த்தனைகளும் கோலாகலமாகத் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்