தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாடாளுமன்ற துணை நாயகர்கள்: கிறிஸ்டஃபர் டிசூசா, சியே யாவ் சுவென் பரிந்துரை

2 mins read
a90004ca-b819-4f62-976e-5d7cad0e63c4
தேர்ந்தெடுக்கப்பட்டால், துணை நாயகராக திரு கிறிஸ்டஃபர் டிசூசாவிற்கு இது இரண்டாவது தவணையாகும். - படம்: gov.sg
multi-img1 of 2

நாடாளுமன்றத்தின் புதிய தவணைக் காலத்திற்கு திரு கிறிஸ்டஃபர் டிசூசா, திரு சியே யாவ் சுவென் இருவரையும் துணை நாயகர்களாக அவை துணைத் தலைவர் ஸாக்கி முகம்மது பரிந்துரைக்கவுள்ளார்.

அதிபர் உரை மீதான விவாதம் செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கும்போது, அந்த இரு மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் திரு ஸாக்கி பரிந்துரைப்பார். தேர்ந்தெடுக்கப்பட்டால், துணை நாயகராக திரு டிசூசாவிற்கு இது இரண்டாவது தவணையாகும். அதேசமயம், திரு சியே முதன்முறையாகப் பரிந்துரைக்கப்படவுள்ளார்.

தற்காப்பு; நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சருமான திரு ஸாக்கி, வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) தமது ஃபேஸ்புக் பதிவில் இதனைத் தெரிவித்தார். திரு டிசூசா, திரு சியே இருவரும் துணை நாயகர் பதவிக்கு ஓர் உறுதியான கடமை உணர்வு, சிறந்த தீர்ப்பு, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் விதிகளுக்கும் அதன் உணர்வுக்கும் மரியாதை ஆகியவற்றைக் கொண்டு வருவார்கள் என்று தாம் நம்புவதாகக் கூறினார்.

துணை நாயகர்களாகத் தேர்வு செய்யப்பட்டால், மன்ற நாயகர் சியா கியன் பெங் இல்லாதபோது, அவரது பொறுப்புகளை இவர்கள் நிறைவேற்றுவார்கள்.

துணை நாயகர்களாக, நாடாளுமன்ற அமர்வுகளுக்குத் தலைமை தாங்குவது, விவாதங்களின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைக் கட்டிக்காப்பது ஆகியவை இவர்களின் கடமைகளில் அடங்கும்.

ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியின் ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினரான திரு டிசூசாவிற்கு இப்பதவி நன்கு பரிச்சயமானது. கடந்த 14வது நாடாளுமன்றத்தின் தவணைக்காலம் முழுவதும், அதாவது 2020 ஆகஸ்ட் 31 முதல் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஏப்ரலில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது வரை, திருவாட்டி ஜெசிக்கா டானுடன் இணைந்து திரு டிசூசா துணை நாயகராக இருந்தார்.

வழக்கறிஞரான திரு டிசூசா, விவாதங்களுக்குத் தலைமை தாங்கும்போது அவரது அமைதியான அணுகுமுறை, சட்ட திட்டங்கள் குறித்த தெளிவு, நியாயம் ஆகியவற்றுக்காக அவை உறுப்பினர்களின் மரியாதையைப் பெற்றுள்ளார் என்று திரு ஸாக்கி கூறினார்.

திரு சியே, மக்களுடன் தொடர்புடைய விவகாரங்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார் என்று திரு ஸாக்கி கூறினார்.

ஜூரோங் சென்ட்ரல் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திரு சியேவின் உரைகள், ‘சிந்தனைத் திறன், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் பாங்கு, நடைமுறைத் தீர்வுகளின் மீதான கவனம்’ ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன என்று திரு ஸாக்கி கூறினார். திரு சியேக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இது இரண்டாவது தவணைக்காலம்.

குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்றம்நாடாளுமன்ற உறுப்பினர்சபாநாயகர்