தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுவா சூ காங் குழுத்தொகுதியில் இரு புதுமுகங்களைக் களமிறக்கும் மசெக

2 mins read
6e78b3d3-a88e-43ff-9de2-57918fd3a5f1
முன்னாள் மூத்த அரசாங்க ஊழியர் ஜெஃப்ரி சியாவ் (இடமிருந்து 2வது), நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் சூ பெய் லிங் (வலமிருந்து 2வது) ஆகிய ​​இருவரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 14) அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். உடன் துணைப் பிரதமர் கான் கிம் யோங் (நடுவில்), ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம் (வலது), புக்கிட் கோம்பாக் தனித்தொகுதியில் போட்டியிடவுள்ள மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வரும் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி சுவா சூ காங் குழுத்தொகுதியில் இரண்டு புதுமுகங்களைக் களமிறக்கவிருக்கிறது.

முன்னாள் மூத்த அரசாங்க ஊழியர் ஜெஃப்ரி சியாவ், நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் சூ பெய் லிங் ஆகிய ​​அவ்விருவரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 14) அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

அவர்கள் துணைப் பிரதமர் கான் கிம் யோங், நாடாளுமன்ற உறுப்பினர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம் ஆகியோருடன் நான்கு உறுப்பினர்கள் கொண்ட சுவா சூ காங் குழுத்தொகுதியில் போட்டியிடவிருக்கின்றனர்.

மக்கள் செயல் கட்சி இதற்குமுன் அறிவித்த 30க்கும் மேற்பட்ட புதுமுகங்களில் திரு சியாவும் டாக்டர் சூவும் அடங்குவர்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசாங்கத் துறையில் பணிபுரிந்துள்ள திரு சியாவ், தேர்தலில் போட்டியிடுவதற்காகப் பணியிலிருந்து விலகிய மூத்த அரசாங்க ஊழியர்களில் ஒருவர்.

46 வயது திரு சியாவ், ஆக அண்மையில் மனிதவள அமைச்சு, வர்த்தக, தொழில் அமைச்சுகளுக்கான இரண்டாம் நிரந்தரச் செயலாளராகப் பதவி வகித்தார்.

அதற்கு முன்னரும் அவர் அரசாங்கத் துறைகளில் உயர் பதவிகளை வகித்திருந்தார், முன்னாள் பிரதமர் லீ சியன் லூங்கின் முதன்மைத் தனிச் செயலாளராகவும் திரு சியாவ் செயல்பட்டுள்ளார்.

அரசியலில் கால்வைப்பதற்கான முடிவுபற்றிச் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்ட திரு சியாவ், “இதுவும் ஒருவகையில் பொதுச் சேவைதான். ஒரு தனிப்பட்ட வகையான பொதுச் சேவை,” எனக் குறிப்பிட்டார்.

டாக்டர் சூ, 20 ஆண்டுகளுக்கும் மேல் சமூக அளவில் அடித்தளத் தொண்டூழியராகச் சேவையாற்றி வருகிறார்.

“பல நடுத்தர வயது குடியிருப்பாளர்கள் உளைச்சலுக்கு ஆளாவதாக என்னிடம் பகிர்ந்துள்ளனர். நான் அவர்களுக்கான குரலாகவும் உதவிக்கரமாகவும் இருக்க விரும்புகிறேன். குடும்பங்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் ஆதரவளிப்பதில் உதவ விரும்புகிறேன்,” என்றார் டாக்டர் சூ.

திரு சியாவ், டாக்டர் சூ ஆகிய இருவருக்கும் இருக்கும் பலதரப்பட்ட அனுபவங்களும் திறமைகளும் சுவா சூ காங் வட்டாரத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களிக்கும் என்று துணைப் பிரதமர் கான் குறிப்பிட்டார்.

புக்கிட் கோம்பாக் தனித்தொகுதி: லோ யென் லிங்

சுவா சூ காங் குழுத்தொகுதியில் இதுவரை கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் சேவையாற்றி வந்த திருவாட்டி லோ யென் லிங், புக்கிட் கோம்பாக் தனித்தொகுதிக்கு மாற்றப்படுகிறார்.

கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தத் தேர்தலில் புக்கிட் கோம்பாக் தனித்தொகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டிலிருந்து புக்கிட் கோம்பாக் தொகுதி, சுவா சூ காங் குழுத்தொகுதியில் முக்கிய அங்கம் வகித்தது.

கடந்த மாதம் தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வு அறிக்கையின்படி புக்கிட் கோம்பாக் தனித்தொகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆண்டுகளில் புக்கிட் கோம்பாக் குடியிருப்பாளர்களுடனான தமது பிணைப்பு மேலும் அணுக்கமாகி உள்ளதாகத் திருவாட்டி லோ தெரிவித்தார்.

“தொடர்ந்து குடியிருப்பாளர்களின் நலனுக்காக எங்கள் பலங்களையும் வளங்களையும் ஒன்றிணைத்துச் செயல்படுவோம்,” என்று அவர் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்