மக்கள் செயல் கட்சியின் தொண்டூழியர்களுக்கும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தொண்டூழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட சலசலப்பு தொடர்பில் யார்மீதும் குற்றம் சுமத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஜனவரி 3ஆம் தேதி புக்கிட் கோம்பாக்கில் தொகுதி உலா சென்ற இரு தரப்புக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட நால்வர்மீதும் குற்றம் சுமத்தப்படாது என்று காவல்துறை தொலைபேசி மூலம் கூறியதாகச் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தெரிவித்தது.
விசாரணையின் முடிவு குறித்தோ, குற்றம் சுமத்தாததற்கான காரணம் குறித்தோ அறிக்கை எதையும் வெளியிடாது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் நீடித்த விசாரணையின் முடிவில் காவல்துறையோ தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகமோ அறிக்கை வெளியிடாதது ஏமாற்றம் அளிப்பதாகக் கட்சி சொன்னது.
சிங்கப்பூர்க் காவல்துறையும் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகமும் எடுத்த முடிவை ஏற்பதாக சொன்ன சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, அதற்கு நன்றி கூறியது. ஆனால் பொது அறிக்கையை வெளியிடாமல் விசாரணையை முடித்துக்கொள்வது பல கேள்விகளுக்குப் பதில் கொடுக்காமல் விடுவது போல இருக்கிறது என்றும் அது தெரிவித்தது.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தொண்டூழியர்கள் வன்முறையில் ஈடுபட்டனரா? மக்கள் செயல் கட்சி தொண்டூழியர்கள் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டனரா? போன்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை என்று அவர்கள் கருதுகின்றனர்.
புக்கிட் கோம்பாக்கில் இருகட்சி தொண்டூழியர்களும் தொகுதி உலா சென்றபோது சந்தித்துக்கொண்டனர். அதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகத்தில் பரவியதை அடுத்து சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தொண்டூழியர் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இருதரப்பும் மற்ற தரப்பு தங்களை வம்பிழுத்ததாக மாறி மாறி கூறின.
பழைய தொகுதி எல்லை வரையறையின்படி சுவா சூ காங்கின் கீழ் வந்த புக்கிட் கொம்பாக்கின் கூட்வியூ கார்டன்ஸில் உள்ள புளோக்குகளுக்கு சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தொண்டூழியர்கள் சென்றபோது மக்கள் செயல் கட்சியின் தொண்டூழியர்கள் பின்னால் வந்ததாக கட்சி வேட்பாளர் எஸ் நல்லக்கருப்பன் கூறினார்.
ஆனால் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தொண்டூழியர் மக்கள் செயல் கட்சி தொண்டூழியரை அச்சுறுத்தியதாகவும் கன்னத்தில் இரண்டு முறை அறைந்ததாகவும் வர்த்தக, தொழில் மற்றும் கலாசார, சமுக, இளையர்துறை மூத்த துணையமைச்சர் லோ யென் லிங் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார்.