இளமைத் துள்ளலுடன் கிறிஸ்துமஸ் பாடல்கள்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த பத்தாண்டுகளாகத் திரு ஜேம்ஸ் ராஜ், 42, தனது வீட்டுக்குப் பாடல் குழுக்களை வரவேற்கிறார்.
“இது எங்களுக்குப் பாரம்பரியம். அதுவும் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் நல்லனவற்றைப் பரப்ப வேண்டும் என்ற உன்னத நோக்கத்துக்காக நாங்கள் இவர்களை வரவழைக்கிறோம்,” என்று ஜேம்ஸ் கூறினார்.
அவ்வாறானதொரு தருணத்தில், தடபுடலான ஏற்பாடுகளுடன் கொண்டாட்ட உணர்வைப் பரப்பும் வகையில் ஜேம்ஸ் வீட்டில் பாடகர்களுக்குச் சுவையான உணவு வகைகளும் காத்திருந்தன.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய வாரங்களில் தேவாலயங்களைச் சேர்ந்த பாடல் குழுக்கள் தேவாலயத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் வீடுகளுக்குச் சென்று பாடுவது வழக்கம்.
அவ்வாறு, அங் மோ கியோ தமிழ் மெத்தடிஸ்ட் திருச்சபையைச் சேர்ந்த பாடகர்கள், ஜேம்ஸ் உள்ளிட்ட உறுப்பினர்களின் வீடுகளுக்குச் சென்று கிறிஸ்துமஸ் பண்டிகை பாடல்களைப் பாடிக் கொண்டாட்ட உணர்வில் திளைத்தனர்.
“இதுபோன்ற பாடல்களைப் பாடுவது எங்களுக்கு மனநிறைவு அளிக்கிறது. இது உறுப்பினர்களிடையே தோழமையையும் அதிகரிக்கிறது. நானும் சிறு வயதிலிருந்து பாடகர் குழுவில் இருந்து வந்துள்ளேன்,” என்று புன்னகையுடன் கூறினார் ஜேம்ஸ்.
இப்பாடல் குழுவில் பெரியவர்களோடு இளையர்கள் பலரும் பங்கேற்று இயேசு நாதரைப் போற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் பாடல்களைப் பாடிக் குடும்பத்தினரை மகிழ்வித்தனர்.
“எனக்கு இது புதிய அனுபவம். தொடக்கத்தில் கூச்சமாக இருந்தபோதிலும் என்னைப் போன்ற இளையர்கள் பலர் இக்குழுவில் இருப்பதால் எனக்கு ஆறுதலாக உள்ளது. திருச்சபையில் நாங்கள் பெரிதாகப் பேச மாட்டோம். பாடல் குழுவில் சேரும்போது பல நட்புறவுகள் ஏற்படுகின்றன,” என்று முதல் முறையாகப் பாடல் குழுவில் பங்கேற்ற இளையர் ரமேஷ்பாபு ரம்யா, 17, கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு வீட்டிலும் பாடல்களைப் பாடிய பின்னர் திருச்சபையின் போதகர் இயேசு பற்றிய போதனைகளை எடுத்துரைத்தார். பாடல்கள் பாடிய பின்னர் அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறி அன்பைப் பகிர்ந்துகொண்டனர்.
இளையர்களில் சிலர் இளமைத் துள்ளலுடன் இசைக் கருவிகளை வாசித்து, பாடல்களுக்கு மெருகூட்டி குடும்ப உறுப்பினர்களை இசை மழையில் நனைய வைத்தனர்.
“நான் சுயமாக கஹோன் வாசிக்கக் கற்றுக்கொண்டேன். பாடல் குழுவில் என் குடும்பத்தினருடன் சேர்ந்தபோது என்னால் கஹோனை வாசிக்க முடியுமா என்று பலர் கேட்டனர். இதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர்தான் பயிற்சி மேற்கொண்டு என்னைத் தயார்ப்படுத்திக்கொண்டேன். பாடல் குழுவில் என் வயதிலுள்ள நண்பர்களைக் காண எனக்கு எப்போதும் ஆவலாக இருக்கும்,” என்று 12 வயதாகும் ராஜா ரேமன் வசந்தன் கூறினார்.
இரவு 8 மணிக்குத் தொடங்கிய இந்த இசைப் பயணம் அதிகாலை 3.30 மணியளவில்தான் முடிவுபெற்றது. சோர்வைப் பொருட்படுத்தாமல் ஒருவரோடொருவர் கைகோத்து, அயராமல் பாடல்களைப் பாடி மகிழ்வித்தனர் உறுப்பினர்கள்.
“திருச்சபைக்குச் சிலரால் அடிக்கடி வர முடியாது. நாங்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடும்போது அவர்களுக்கு ஒரு தனி இன்பம் கிடைக்கிறது. சில தலைமுறையினர் இசை மீது அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், நண்பர்களாக ஒன்றுசேர்ந்து வீடுகளுக்குச் செல்லும்போது அது சமூக உணர்வையும் பறைசாற்றுகிறது. இவ்வாறு, எங்கள் குழுவில் இளையர்கள் அதிகம் சேர்கிறார்கள்,” என்று புன்முறுவலுடன் சொன்னார் ஏற்பாட்டாளர் ரெபேக்கா அம்மணி அலெக்சாண்டர் ராஜ், 25.
இரட்டிப்பு மகிழ்ச்சி தந்த கொண்டாட்டம்
லைஃப் சென்டர் தேவாலயத் திருச்சபையினர், பல ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் வீடு வீடாகச் சென்று கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடி வருகின்றனர்.
டிசம்பர் 18 முதல் 20ஆம் தேதி வரை தேவாலயச் சபையினர் 25 பேர் பல வீடுகளுக்கும் சென்று கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடினர்.
முதன்முறையாக இந்நடவடிக்கையில் பங்கேற்ற 36 வயது ஷரீனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அதற்குக் காரணம், அவரின் ஒரு வயது மகளுக்கு இது முதல் கிறிஸ்துமஸ்.
மகளைக் கையில் தூக்கிக்கொண்டே வீடுகளுக்குச் சென்று பாடியது ஷரீனுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” எனப் புன்னகைப் பூத்த முகத்துடன் அவர் கூறினார்.
“இம்மாதம் எங்களுக்கு முக்கியமான மாதம். கிறிஸ்து பிறந்ததில், எங்களுக்குள் இருக்கும் சந்தோஷத்தைப் பிறருடன் பகிர விரும்புகிறோம்.
“நாங்கள் வயதானவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து வயதினரின் இல்லங்களுக்கும் சென்று கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடுகிறோம்,” என்றார் லைஃப் சென்டர் தேவாலய உறுப்பினர் பி.எஸ்.அர்விந்த்.
கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாட வந்த திருச்சபையினரைப் பெருமகிழ்ச்சியுடன் தம் வீட்டினுள் வரவேற்றார் 91 வயது போதகர் ரீட்டா அபிசேகரா.
“அனைவரும் எங்கள் வீட்டிற்கு வந்ததில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கிறிஸ்துமஸ் என்பது இறைவனின் பிறந்தநாளைக் கொண்டாடும் வாய்ப்பு. நாம் அனைவரும் இறைவனுக்குச் சமர்ப்பிக்க ஏதேனும் ஒன்றாவது வைத்துள்ளோம். அவரது ஆசியைப் பெறுவோமாக,” என அவர் வாழ்த்தினார்.

