தெம்பனிஸ் சங்காட்டில் சில்வண்டுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை

தெம்பனிஸ் சங்காட்டில் சில்வண்டுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை

2 mins read
9463a28e-f8e1-4e2a-a4cd-b9ec5c9695d7
புளோக் 321, தெம்பனிஸ் ஸ்திரீட் 33ல் சேகரிக்கப்பட்ட சில்வண்டுகள் (இடது). அந்தக் கட்டடத்தின் 10, 11ஆம் தளங்கள் மரங்களின் மேற்பகுதிக்கு அருகில் இருப்பதாகவும் அந்தத் தளங்களில் சில்வண்டுகளின் இரைச்சல் ஆக அதிகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெம்பனிஸ் சங்காட் வட்டாரத்தில் வீடுகளுக்குள் கூட்டமாகப் புகுந்து தொல்லை கொடுக்கும் சில்வண்டுகளைக் (Cicadas) கட்டுப்படுத்தும் நடவடிக்கை மார்ச் மாதம் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐந்து மாதகால முயற்சியில், பாதுகாப்பான, புதிய உத்திகள் சோதனை செய்யப்படவுள்ளதாக அந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் பிப்ரவரி 26ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

ஆண்டின் குறிப்பிட்ட பருவத்தில் கூட்டமாக வெளிவரும் இந்தச் சில்வண்டுகள் குடியிருப்பாளர்களுக்குப் பெரிதும் அச்சமூட்டுபவையாக விளங்குகின்றன.

மரங்களுக்கு அருகிலுள்ள மண்பரப்பை விரிப்புகளால் மூடுவது, சில்வண்டுகளின் வாழ்க்கைச் சுழற்சியைத் தடுக்க அடிமரப் பகுதியை அலுமினியத் தாள்களால் சுற்றுவது போன்றவை இதற்கான தீர்வுகளில் அடங்கும் என்று கூறப்பட்டது.

இருப்பினும் எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது குறித்த மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை. இது குறித்து மார்ச் 1ஆம் தேதி நடைபெறவுள்ள ஒரு மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் விரிவான விளக்கங்கள் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

ஆக அதிக இரைச்சலை உண்டாக்கும் பூச்சியினங்களில் ஒன்றாகச் சில்வண்டுகள் கருதப்படுகின்றன. வழக்கமாக முதிர்ந்த மரங்கள் நிறைந்த வட்டாரங்களில் காணப்படும் அவை, அந்த மரங்களின் சாற்றை (tree sap) உண்டு உயிர்வாழ்பவை.

குடியிருப்பாளர்களின் கவலை

வழக்கமற்ற வகையில், 2022ஆம் ஆண்டிலிருந்து தெம்பனிஸ் சங்காட் பகுதியிலும் வீடுகளுக்குள்ளும் சில்வண்டுகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாகக் குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.

மார்ச் போன்ற வெப்பமான மாதங்களில் கூட்டமாக வெளிவரும் இவற்றின் எண்ணிக்கை 3, 4 மாதங்களுக்குப் பிறகு படிப்படியாகக் குறைவதாக அவர்கள் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட இரண்டு 50 காசு நாணயங்களின் அளவில் இருக்கும் சில்வண்டுகள் இரவு நேரங்களில் நடைபாதைகள், வீடுகளில் உள்ள விளக்குகளைச் சுற்றிலும் காணப்படும் என்று குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

மின்தூக்கிக்குள் சில்வண்டுகள் புகுந்துவிடுவதால் மக்கள் அலறும் சத்தம் கேட்கும் என்றும் அவற்றுக்கு அஞ்சி வீட்டின் சன்னல், கதவுகளை எப்போதும் மூடியே வைத்திருக்க வேண்டியுள்ளது என்றும் சிலர் கூறினர்.

இரவு நேரங்களில் நடைபாதையில் மட்டுமன்றி, வீட்டின் தரையிலும் அவை மொய்ப்பதைக் காணமுடியும் என்று கூறப்பட்டது.

புதிய திட்டம்

சில்வண்டுகளைக் கட்டுப்படுத்தும் புதிய திட்டத்திற்குத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் சூ தலைமை தாங்குகிறார். அடித்தள அமைப்புகள், தெம்பனிஸ் நகரமன்றம் இணைந்து மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கு தேசியப் பூங்காக் கழகமும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக வல்லுநர் ஃபூ மாஷெங்கும் ஆதரவு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.

“சிங்கப்பூரின் மற்ற இடங்களில் சில்வண்டுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்குப் பயனளிக்கும் வகையில், தெம்பனிஸ் சங்காட்டில் நடைபெறவிருக்கும் முன்னோட்ட முயற்சி அமையும்,” என்று திரு சூ குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்