வட்ட ரயில் பாதை 6: கெப்பல் மேம்பாலத்தின் கீழ் சுரங்கப்பாதை அமைப்பு

வட்ட ரயில் பாதை 6: கெப்பல் மேம்பாலத்தின் கீழ் சுரங்கப்பாதை அமைப்பு

2 mins read
bc5cb925-6566-46c1-a79b-f6242940e5ef
மேம்பாலத்தின் இரு முக்கியத் தூண்கள் சுரங்கப்பாதை அமையவிருந்த பாதையில் இருந்ததால், பாலத்தின் எடையைத் தாங்கும் வகையில் 400 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட சிறு தூண்களும் ஒரு பெரிய தூணும் அமைக்கப்பட்டன. - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

வழக்கமான வாகனப் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் இன்றி, கெப்பல் மேம்பாலத்துக்கு அடியில் வட்ட ரயில் பாதை 6ஆம் கட்டத்துக்கான சுரங்க ரயில் பாதை கட்டுமானப் பணிகளை நிலப் போக்குவரத்து ஆணையம் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

மேம்பாலத்தின் இரண்டு முக்கியத் தூண்கள் சுரங்க ரயில் பாதை அமையவிருந்த பாதையில் இருந்ததால், பாலத்தின் எடையைத் தாங்கும் வகையில் 400 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட சிறு தூண்களும் ஒரு பெரிய தூணும் அமைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, கெப்பல், கெண்டோன்மெண்ட் எம்ஆர்டி நிலையங்களுக்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பதற்காக முந்தைய தூண்களின் ஏழு அடித்தளங்கள் துளையிடப்பட்டு வெட்டி எடுக்கப்பட்டன.

இதற்கான ஆயத்தப் பணிகள் ஓராண்டு வரை நீடித்தாலும், தூண்களை வெட்டும் பணி சில நாள்களிலேயே முடிவடைந்ததாக எல்டிஏ தெரிவித்தது.

இந்தக் கட்டுமானத்தில் சுரங்கப்பாதைகளையும் தளங்களையும் ஒன்றன் மேல் ஒன்றாக அமைக்கும் பொறியியல் உத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், கெண்டோன்மெண்ட் நிலையப் பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க தஞ்சோங் பகார் பழைய ரயில் நிலையக் கட்டடப் பாதுகாப்பிற்கான சிறப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

பரபரப்பான சாலைகளுக்கு அடியில் ஆறு பாதசாரி சுரங்க இணைப்புகளை உருவாக்க, நிலத்தைத் தோண்டத் தேவையில்லாத குழாய் கூரை முறை பயன்படுத்தப்பட்டது.

தற்போது புதிய மற்றும் பழைய வட்ட ரயில் பாதை கட்டமைப்பு முறைகளை ஒருங்கிணைக்கும் இறுதிச் சோதனைகள் நிறைவடைந்துள்ளன.

அப்பணிக்காக கடந்த சில மாதங்களில் ரயில்கள் முன்னதாகவே நிறுத்தப்பட்டு, ஒருங்கிணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

புதிய நிலையங்கள் வரும் ஜூலை 12ஆம் தேதி முதல் தங்களின் சேவையை அதிகாரபூர்வமாகத் தொடங்கவுள்ள நிலையில், தற்போது எஸ்எம்ஆர்டி நிறுவனம் பாதுகாப்பையுப் நம்பகத்தன்மையையும் உறுதி செய்ய பல்வேறு அவசரகாலப் பயிற்சிகளையும் முன்னோட்டங்களையும் முழுவீச்சில் நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்