தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜூன் 15 - ஜூலை 30: வழக்கத்தைவிட முன்கூட்டியே நிறுத்தப்படும் வட்டப் பாதை ரயில் சேவை

1 mins read
a6e0850d-3b2c-4a0e-acbf-5cf181d3ef6d
வட்டப் பாதையின் ஆறாம் கட்ட பணிகளுக்கு வழிவிட ஒருசில நாள்களில் ரயில் சேவைகள் முன்கூட்டியே நிறுத்தப்படுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் வட்டப் பாதையில் உள்ள பெருவிரைவு ரயில் சேவைகள் ஜூன் 15ஆம் தேதியிலிருந்து ஜூலை 30ஆம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலிருந்து புதன்கிழமை வரை இரவு 11 மணிக்கு சேவைகளை நிறுத்திக்கொள்ளும்.

அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டில் திறக்கவிருக்கும் வட்டப் பாதையின் 6ஆம் கட்டத்துக்கான கட்டமைப்புப் புதுப்பிப்புப் பணிகளுக்கு வழிவிடும் வகையில் ரயில் சேவைகள் வழக்கத்தைவிட முன்கூட்டியே செயல்பாடுகளை நிறுத்துவதாக நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் மே 22 தெரிவித்தன.

வியாழக்கிழமைகள், வெள்ளிக்கிழமைகள், சனிக்கிழமைகளில் வட்டப் பாதையின் சேவைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் கூறின.

நிலத்துக்கடியில் உள்ள கெப்பல், கெண்டன்மண்ட், பிரின்ஸ் எட்வர்ட் ரோடு ஆகிய நிலையங்களை உள்ளடக்கிய வட்டப் பாதையின் ஆறாம் கட்டம் ஹார்பர் ஃபிரண்ட், மரினா பே நிலையங்களுக்கு இடையிலான இடைவெளியை மூடுகிறது.

புதிய நிலையங்களின் செயல்பாடுகளை உறுதிசெய்ய தற்போதுள்ள ரயில் கட்டமைப்புப் புதுபிக்கப்படவேண்டும்.

புதிதாகப் பொருத்தப்படும் கருவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் தீவிர சோதனைகளை நடத்தவும் பொறியியலுக்குக் கூடுதல் நேரம் தேவைப்படுகிறது.

எனவே, பயணிகள் தங்கள் பயணத்தைச் சரிவர திட்டமிட்டு மாற்று வழிகளில் தங்கள் இடத்துக்குச் செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

மாற்றங்கள் பற்றி பொதுமக்களுக்குத் தெரிவிக்க வட்டப் பாதை ரயில் நிலையங்களிலும் இதர இணைப்பு முனையங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்படும்.

பாதிக்கப்பட்ட நிலையங்களில் பயணிகளுக்கு உதவ நிலைய ஊழியர்களும் பணியமர்த்தப்படுவர்.

குறிப்புச் சொற்கள்