வட்ட ரயில் பாதை முழுமையாகத் திறக்கப்பட்ட பிறகு முதல் வார நாளான திங்கட்கிழமையன்று (ஜூலை 13) காலை உச்சநேரத்தில் பயணம் சுமுகமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்ட ரயில் பாதையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) புதிதாக மூன்று நிலையங்கள் திறக்கப்பட்டன. பிரின்ஸ் எட்வர்ட், கேன்டோன்மென்ட், கெப்பல் ஆகியவை அந்த மூன்று புதிய ரயில் நிலையங்களாகும்.
அதற்கு மறுநாளான திங்கட்கிழமை பயணம் சுமுகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
பயணிகள் திருப்தி
முழுமையாகத் திறக்கப்பட்டிருக்கும் பாதையில் பயணம் திருப்தியாக அமைந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய பயணிகள் தெரிவித்தனர். தங்களின் பயணம் விரைவாகவும் மேலும் வசதியாகவும் அமைந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.
எடுத்துக்காட்டாக, ஹா பார் வில்லா நிலையத்திலிருந்து டோபி காட் நிலையத்துக்கு அருகே உள்ள சிங்கப்பூர் கலைப்பள்ளிக்குச் செல்ல மாணவி ஷார்லீன் இங், 15, முன்பு வடகிழக்கு ரயில் பாதைக்கு மாறிக்கொள்ள ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்தில் ரயிலை மாற்றிவந்தார். இப்போது அதற்கான தேவை இல்லாமல் நேரடியாக வட்ட ரயில் பாதையில் பயணம் செய்ய முடிவது வசதியாக இருப்பதாகச் சொன்னார்.
வட்ட ரயில் பாதையில் கூடுதல் நிலையங்கள் இருந்தாலும் அப்பாதையையே விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
அதேபோல் 53 வயது சலினா டான், தனது வீட்டுக்கு அருகே உள்ள மரினா பேயில் ரயிலில் ஏறி வட்ட ரயில் பாதையில் 20 நிமிடங்களில் தனது அலுவலகத்துக்கு அருகே உள்ள லேப்ரடோர் பார்க் நிலையத்துக்குப் பயணம் செய்ததாகத் தெரிவித்தார். ரயிலில் தனக்கு இருக்கை கிடைத்ததையும் அவர் குறிப்பிட்டார்.
வட்ட ரயில் பாதை முழுமையாகத் திறக்கப்படுவதற்கு முன்பு தனது பயண நேரம் கிட்டத்தட்ட 45 நிமிடங்களாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
அமைச்சர் கருத்து
முழுமையாகத் திறக்கப்பட்டுள்ள வட்ட ரயில் பாதை நம் அனைவருக்கும் முழு வட்டமாக விளங்குகிறது என்று தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் ஞாயிற்றுக்கிழமை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
“அப்படியென்றால், கூடுதல் நேரடிப் பயணங்கள் இருக்கின்றன, ரயில்கள் மாறுவது குறையலாம், நமது ரயில் கட்டமைப்பில் கூடுதல் பயணத் தெரிவுகள் சாத்தியமாகும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

