சமிக்ஞை முறை பழுதடைந்ததை அடுத்து வட்ட ரயில் பாதையில் உள்ள பத்து எம்ஆர்டி நிலையங்களில் டிசம்பர் 23ஆம் தேதியன்று ரயில் சேவைத் தடை ஏற்பட்டது.
சமிக்ஞை பழுதுநீக்கும் பணிகளுக்குப் பிறகு, வட்ட ரயில் பாதையில் எம்ஆர்டி சேவை வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
பூமலை எம்ஆர்டி நிலையத்துக்கும் பாய லேபார் எம்ஆர்டி நிலையத்துக்கும் இடையிலான பயண நேரத்தில் கூடுதலாக 15 நிமிடங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று டிசம்பர் 23ஆம் தேதி பிற்பகல் 12.46 மணிக்கு எஸ்எம்ஆர்டி நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
பாதிக்கப்பட்ட நிலையங்களில் இலவசப் பேருந்துச் சேவைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ரயில் சேவைகள் படிப்படியாக வழக்கநிலைக்குத் திரும்புவதாகப் பிற்பகல் 1.11 மணிக்கு எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.
ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாகவும் இலவசப் பேருந்துச் சேவை நிறுத்தப்படுவதாகவும் பிற்பகல் 1.19 மணிக்கு எஸ்எம்ஆர்டி கூறியது.