வட்ட ரயில்பாதை கட்டமைப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டு ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை (ஜூலை 4) அதன் நிறைவு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, கெப்பல், கென்டான்மன்ட், பிரின்ஸ் எட்வர்ட் நிலையங்கள் பொதுமக்கள் பார்வைக்கு அன்றையதினம் திறந்துவிடப்பட்டது.
சனிக்கிழமை இரவு ஒன்பது மணிவரை அந்த மூன்று நிலையங்களும் திறந்திருக்கும். அவற்றுக்கிடையே மக்கள் இலவசமாக ரயில் பயணத்தை மேற்கொண்டு, நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பற்பல புதிய வசதிகளைக் காணலாம். வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, பல நினைவுப் பொருள்களையும் பொதுமக்கள் அங்கு வாங்கலாம்.
வட்ட ரயில்பாதை 39 கிலோமீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 33 ரயில் நிலையங்கள், 12 சந்திப்பு மையங்கள் உள்ளன. வட்ட ரயில்பாதை அதன் பயணிகளை சிங்கப்பூரில் இயங்கும் அனைத்து எம்ஆர்டி ரயில் நிலையங்களுடனும் இணைக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
வட்ட ரயில்பாதையின் ஆறாம் கட்ட நிறைவு அங்கமாக நடந்த விழாவில் போக்குவரத்து தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
பல பொறியாளர்கள், திட்ட மேலாளர்கள், குத்தகையாளர்கள், ஒப்பந்ததாரர்கள், ஊழியர்கள் என பலரின் கைகளில் இத்திட்டம் தவழ்ந்து வந்துள்ளதை நிதிக்கான மூத்த துணை அமைச்சருமான அவர் நினைவுகூர்ந்தார்.
2013ஆம் ஆண்டில் வட்ட ரயில்பாதையின் வடிவமைப்புக்கான முடிவுகள் இறுதி செய்யப்பட்போது, போக்குவரத்து அமைச்சில் பணியாற்றியதாக திரு ஜெஃப்ரி கூறினார்.
எனவே, 13 ஆண்டுகளுக்குப் பிறகு, திட்டம் நிறைவடைந்து ரயில் நிலையங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படுவது குறித்து அவர் மிகவும் மகிழ்ச்சியும் நன்றியுணர்வும் அடைவதாகக் குறிப்பிட்டார்.
ஹார்பர் பிரன்ட் முதல் மெரினா பே வரையில் முழுச் சுற்றளவில் உள்ள ரயில் கட்டமைப்பில் அந்த இரு நிலையங்களையும் இணைக்கும் இறுதி மூன்று நிலையங்கள் கெப்பல், கென்டான்மன்ட், பிரின்ஸ் எட்வர்ட் நிலையங்கள் ஆகும்.
வட்ட ரயில் பாதை முழுமை அடைவதன் வழி 10,000 பயணிகளுக்கு வழக்கத்தைவிட விரைவான சேவையை வழங்கும் எனவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

