சிட்டிபேங்க், சிங்கப்பூரிலுள்ள தனது கடைசிக் கிளையை அக்டோபர் 12ஆம் தேதி மூடுகிறது.
இணையம் மூலம் தன் வாடிக்கையாளர்களுக்குச் சேவையளிக்க அந்த வங்கி முடிவு செய்துள்ளது. அத்துடன், வசதி படைத்த வாடிக்கையாளர்களைத் தனது செல்வந்தர்கள் பட்டியலில் சேர்ப்பதிலும் அது கவனம் செலுத்த உள்ளது.
வங்கி நடவடிக்கைகள் மின்னிலக்கம், இணையம் மற்றும் சுயசேவைத் தளங்களுக்கு மாறியதன் விளைவாக தனது கிளையை மூடுவதாக அந்த வங்கி புதன்கிழமை (செப்டம்பர் 25) தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவித்தது.
பணம் போடுவது போன்ற சிறிய பரிவர்த்தனைகள் மட்டும் நடைபெறும் கிளைகளை மூட முடிவு செய்யப்பட்டதாக இதற்கு முன்னர் சிட்டிபேங்க் சிங்கப்பூர் தலைமை நிர்வாக அதிகாரி பிரென்டன் கார்னி கூறியிருந்தார்.
2019ஆம் ஆண்டு அதுபோன்ற 15 கிளைகள் இங்கு இருந்தன.
21 ஜூரோங் கேட்வே, சிபிஎஃப் ஜூரோங் கட்டடத்தில் உள்ள தனது கடைசி கிளையையும் சிட்டிகோல்ட் சென்டரையும் சிட்டிபேங்க் அடுத்த மாதம் மூடுகிறது.
தற்போது, உலகம் முழுவதும் நான்கு செல்வந்தர் வங்கி மையங்கள் அந்த வங்கியிடம் உள்ளன. அதில் ஒன்று சிங்கப்பூரில் உள்ளது. அதில் மூன்று சேவை மையங்கள் உள்ளன.
கடந்த 2020ஆம் ஆண்டு 268 ஆர்ச்சர்ட் ரோட்டில் தனது முதல் செல்வந்தர் சேவை மையத்தை சிட்டிபேங்க் தொடங்கியது. பின்னர், கடந்த ஆண்டு டிசம்பரில் பார்க்வே பரேடிலும் இவ்வாண்டு ஹாலந்து வில்லேஜிலும் மேலும் இரு சேவை மையங்கள் திறக்கப்பட்டன.