அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும் இவ்வாண்டு 0.4 மாத அரையாண்டு போனஸ் வழங்கப்படும் என்று பொதுச் சேவைப் பிரிவு திங்கட்கிழமை (ஜூன் 16) அறிவித்தது.
ஆரம்பநிலை அதிகாரிகளுக்குக் கூடுதல் தொகையாக $400 வரை வழங்கப்படும். இது ஒருமுறை வழங்கப்படும் தொகை.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் நிலை, பொருளியல் முன்னுரைப்பு ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அரையாண்டு போனஸ் வழங்கப்படுவதாக பொதுச் சேவைப் பிரிவு கூறியது.
“மொத்த உள்நாட்டு உற்பத்தி பலவீனமடையும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்வாண்டின் பொருளியல் நிலையை பொதுத் துறை தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் இணைந்து கண்காணிக்கும்,” என்று பொதுச் சேவைப் பிரிவு தெரிவித்தது.
MX13(I) மற்றும் MX14 நிலை அரசாங்க ஊழியர்கள் போனசுடன் ஒருமுறை வழங்குதொகையாக $250 பெறுவர்.
MX15 மற்றும் MX16 நிலை அரசாங்க ஊழியர்களும் செயலாக்க ஆதரவுத் திட்டத்தின்கீழ் உள்ளவர்களும் கூடுதலான, ஒருமுறை வழங்குதொகையாக $400 பெறுவர்.
அரசாங்க சேவை தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, இந்தத் தொகைகள் நிர்ணயிக்கப்பட்டன என்று பொதுச் சேவைப் பிரிவும் தேசிய தொழிற்சங்க காங்கிரசும் (என்டியுசி) தனித்தனியே தெரிவித்தன.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூரின் பொருளியல், ஆண்டு அடிப்படையில் 3.9 விழுக்காடு உயர்ந்ததாக பொதுச் சேவைப் பிரிவு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
2025ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0 விழுக்காட்டுக்கும் 2 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு முன்னுரைத்துள்ளது.
அரசாங்க ஊழியர்களுக்குக் கடந்த ஆண்டு 0.45 மாத அரையாண்டு போனசும் 1.05 மாத ஆண்டிறுதி போனசும் வழங்கப்பட்டன.
2023ஆம் ஆண்டில் அரசாங்க ஊழியர்களுக்கு 0.3 மாத அரையாண்டு போனஸ் வழங்கப்பட்டது.