தளவாட நிறுவனத்தில் ஆட்குறைப்பு; 33 பேர் பணியிழப்பு

தளவாட நிறுவனத்தில் ஆட்குறைப்பு; 33 பேர் பணியிழப்பு

படம்: மதர்ஷிப்

05 Apr 2026 - 8:16 pm

2 mins read

தென்கொரியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘சிஜே லாஜிஸ்டிக்ஸ் ஏசியா’ நிறுவனம், சிங்கப்பூரில் 33 பேரை ஆட்குறைப்பு செய்யத் திட்டமிட்டுள்ளது.

தனது தரவு மையத்தை ‘கிளவுட்’ (Cloud) தொழில்நுட்பத்திற்கு மாற்றுவதாலும் அதன் செயல்பாடுகளை வியட்னாமில் உள்ள குழுவிடம் ஒப்படைப்பதாலும் சிங்கப்பூரில் இயங்கும் அந்நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிவரும் 33 பேரைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மார்ச் 24ஆம் தேதி நடந்த சந்திப்பு ஒன்றில் அந்த நிறுவனத்தின் தலைமைத் தகவல் அதிகாரி தெரிவித்தார்.

அந்நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சவால்களே இந்த முடிவுக்குக் காரணம் என ஊழியர்களிடம் அவர் விளக்கினார்.

சிங்கப்பூரில் செயல்படும் ‘சிஜே லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனத்தில் ஒட்டுமொத்தமாக 200 பேர் பணியாற்றுகின்றனர் என்றும் அவர்களில் 33 பேர் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் உள்ளனர் என்றும் அலெக்ஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஊழியர் ‘மதர்ஷிப்’ செய்தி நிறுவனத்திடம் கூறினர்.

இந்த ஆட்குறைப்பு ஏப்ரல், ஜூன், ஆகஸ்ட், அக்டோபர் ஆகிய மாதங்களில் கட்டம் கட்டமாக நடைபெறும். சிங்கப்பூர்க் குழுவினர், பணி ஒப்படைப்பு நடவடிக்கையில் உதவுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தொடக்கத்தில், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தின் அடிப்படையில் ஒன்று முதல் மூன்று மாதச் சம்பளம் இழப்பீடாக வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பணிக்காலத்தின் ஒவ்வோர் ஆண்டுக்கும் இரண்டு வாரச் சம்பளம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

நிர்வாகத்தின் இந்த முடிவைத் தான் ஏற்றுக்கொள்வதாகவும் மற்ற ஊழியர்களும் ஏற்றுக்கொள்வர் எனத் தான் எண்ணுவதாகவும் அலெக்ஸ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்