தனியார் தொப்புள்கொடி ரத்த வங்கியான கார்ட்லைஃப் மீது குறைந்தது 5.45 மில்லியன் வெள்ளி இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கார்ட்லைஃபிடம் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேகரித்து வைத்த பெற்றோர் இழப்பீடு கோரியுள்ளனர்.
கோர்ட்லைஃபிடம் தாங்கள் சேர்த்து வைத்த ரத்தம் பாழடைந்ததாகவோ பாழடையும் அபாயம் அதிகம் உள்ளதாகவோ தங்களிடம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெற்றோர் இழப்பீடு கோரியுள்ளனர்.
இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது திங்கட்கிழமை (டிசம்பர் 1) தனக்குத் தெரிய வந்ததாக கார்ட்லைஃப் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) இரவு அறிவித்தது.
109 சிபியு அளவு தொப்புள்கொடி ரத்தத்தை கார்ட்லைஃபிடம் சேகரித்து வைத்த பலரைப் பிரதிநிதித்து ஒருவர் இவ்வழக்கைத் தொடுத்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி, பதிலளிக்குமாறு கோரிக்கைக் கடிதத்தை (letter of demand) அனுப்பிய அதே குழுவினர்தான் இப்போது இழப்பீடு கோரி வழக்கு தொடுத்திருப்பதாக கார்ட்லைஃப் தெரிவித்தது. மார்ச்சில் தங்களுக்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதம் குறித்து கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி கார்ட்லைஃப் அறிவித்தது.
கவனமின்மை அல்லது ஒப்பந்தத்தில் இடம்பெற்ற அம்சங்களுக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளாதது அல்லது இரண்டினாலும்தான் தாங்கள் சேகரித்து வைத்த ரத்தம் சரிப்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்ததற்கு கார்ட்லைஃப் பொறுப்பேற்கவேண்டும் என்று வழக்கு தொடுத்தவர்கள், கார்ட்லைஃபை பொறுப்பேற்கச் சொல்லிக் குரல் கொடுக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தை மதிப்பிற்கு ஏற்ப சேதமடைந்த ஒவ்வோர் அளவு ரத்தத்துக்கும் 50,000 வெள்ளி அல்லது நீதிமன்றம் தீர்மானிக்கும் தொகை இழப்பீடாகத் தங்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று அவர்கள் வழக்கு தொடுத்துள்ளனர். அதோடு, பலனின்றி செலவான தொகை தங்களுக்குத் திருப்பித் தரப்பட வேண்டும் அல்லது இழப்பைக் கணிப்பதற்கான உத்தரவு ஆணையை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.
தங்களிடம் கேட்கப்படும் இழப்பீட்டுத் தொகையின் மொத்த மதிப்பு குறைந்தது 5.45 மில்லியன் வெள்ளிக்கு வருவதாக கார்ட்லைஃப் தெரிவித்தது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தான் ஆலோசித்து வருவதாகவும் அது கூறியது.

