தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி சேவை தடங்கல் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம்

2 mins read
a7623b99-0ea0-4077-b0ba-f2ae822e037f
புதிய மூன்றாம் தலைமுறை ரயில்கள் 20 ஆண்டுக்கும் மேலாக சேவையில் உள்ள ரயில்களுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட உள்ளன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி ரயில் (LRT) அக்டோபர் 22ஆம் தேதி பழுதடைந்ததற்கு அதன் சக்கரம் ஒன்றின் அமைப்பிலுள்ள பற்சக்கரக் கோளாறு காரணம் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறி உள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணையில் அந்தக் கோளாறு பற்றி தெரிய வந்ததாகவும் விசாரணை நீடிப்பதாகவும் அவர் சொன்னார்.

எல்ஆர்டி ரயில் பழுதடைந்ததன் காரணமாக அன்றைய தினம் மாலை உச்சநேரத்தில் புக்கிட் பாஞ்சாங் மற்றும் சுவா சூ காங் நிலையங்களுக்கு இடையில் சேவைத் தடங்கல் ஏற்பட்டது.

“பற்சக்கரத்தில் (gear) கோளாறு ஏற்பட்டதால் பழுதடைந்த சக்கரக் கட்டமைப்பிலுள்ள இரு சக்கரங்கள் சுற்றவில்லை.

“மேலும், ரப்பர் சக்கரங்களுக்கும் தண்டவாளத்துக்கும் இடையில் ஏற்பட்ட உராய்வால் சக்கரங்கள் பழுதடைந்தன.

“அதனால் ரயிலுக்கான மின்சாரம் தடைபட்டது,” என்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் திரு சீ குறிப்பிட்டார்.

அந்த எல்ஆர்டி சேவையை நடத்தும் எஸ்எம்ஆர்டி நிறுவனம் ஒன்றரை மணி நேரத்தில் கோளாறுகளைச் சரிசெய்தது. அதனைத் தொடர்ந்து, மறுநாள் காலை எல்ஆர்டி சேவை மீண்டது.

இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டிலும் பற்சக்கரக் கோளாறு ஏற்பட்டதை திரு சீ நினைவுகூர்ந்தார்.

“நீண்டகாலத்துக்குப் பின்னர் நிகழ்ந்திருக்கும் கோளாறு குறித்து விசாரணையின்போது அணுக்கமாக ஆராய்வோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

“முதலாம் தலைமுறை எல்ஆர்டி ரயில்களில் சில 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையில் உள்ளன.

“புதிதாக 19 மூன்றாம் தலைமுறை எல்ஆர்டி ரயில்கள், நடப்பில் உள்ள முதலாம் தலைமுறை ரயில்களுக்கு மாற்றாக சேவையில் அறிமுகப்படுத்தப்படும்.

“புதிய ரயில்களில் ஆறு ரயில்கள் வந்துவிட்டன. அவற்றில் நான்கு ரயில்கள் சேவையில் இணைக்கப்பட்டுவிட்டன. எஞ்சிய இரு ரயில்கள் சோதனை ஓட்டத்தில் உள்ளன.

“13 புதிய ரயில்கள் அடுத்த ஆண்டு சிங்கப்பூர் வந்து சேரும்,” என்று திரு சீ தெரிவித்தார்.

நம்பகத்தன்மை இலக்குகள்

ரயில் சேவை நம்பகத்தன்மை இலக்குகளை அதிகரிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அமைச்சர் சீ மன்றத்தில் விளக்கினார்.

“கோளாறுகளுக்கு இடையில் 1 மில்லியன் கிலோ மீட்டர் (MKBF) இருக்க வேண்டும் என்பது நம்பகத்தன்மைக்கான தற்போதைய இலக்கு. இது பொருத்தமான இலக்கு,” என்றார் அமைச்சர் சீ.

இருப்பினும், அந்த இலக்கு ஐந்தாண்டுகளுக்கு முன்னர் வகுக்கப்பட்டது என்றும் அதனை உயர்த்தும் சாத்தியம் உள்ளதா என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் கேட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் சீ, “அதனை உயர்த்துவது பற்றி கவனத்துடன் பரிசீலிக்க வேண்டி உள்ளது. காரணம், அதற்கு ஆகும் செலவு, பயணிகள் அல்லது வரிசெலுத்துவோருக்குச் சுமையாக அமையும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்