தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எதிர்க்கட்சியுடன் மோதல்: காணொளியை வெளியிட்ட மசெக தொண்டர்

2 mins read
51d8741c-d8a4-42cc-b8a1-b9dd863bd0b9
மசெக தொண்டர் அஸ்மான் வெளியிட்ட காணொளி, அடையாளம் தெரியாத மசெக பெண் தொண்டர் ஒருவரை பிஎஸ்பி கட்சியினர் சூழ்ந்திருப்பதைக் காட்டியது. - படம்: காணொளி/ அஸ்மான் இப்ராகிம்

ஆளும் மக்கள் செயல் கட்சி தொண்டூழியர்களுக்கும் எதிர்க்கட்சியான சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

இந்த விவகாரத்தில் வம்புக்கு வந்ததாகவும் தொந்தரவு செய்ததாகவும் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்ற ஜனவரி 4ஆம் தேதி புக்கிட் கொம்பாக்கில் மக்களைச் சந்திக்கச் சென்றபோது இரு கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியுடன்(பிஎஸ்பி) ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பில் மக்கள் செயல் கட்சி தொண்டூழியர்களில் ஒருவர் காணொளிளை சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

தன்னை ஒரு மசெக தொண்டூழியர் என காட்டிக் கொண்ட அஸ்மான் இப்ராகிம் என்பவர், ஜனவரி 9ஆம் தேதி காணொளிகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையே பிஎஸ்பி தொண்டர் ஒருவர், சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளதால் விசாரணை நடைபெற்று வருகிறது.

திரு அஸ்மான் தனது பதிவில், பிஎஸ்பி தொண்டர்களுடன் ஏற்பட்ட நேரடித் தொடர்புகளைக் காட்டும் இரண்டு காணொளிகளைப் பதிவிட்டிருந்தார்.

முதல் காணொளியில் அடையாளம் தெரியாத மக்கள் செயல் கட்சி பெண் தொண்டர் ஒருவரை பிஎஸ்பி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சூழ்ந்து நின்று பேசுவதைக் காட்டுகிறது.

இந்தக் காணொளிக்கு “என்னுடைய சக பெண் தொண்டர் பிஎஸ்பி தொண்டர்களால் சூழப்பட்டதை பார்த்து கவலையடைந்தேன். அதனைப் பதிவு செய்யத் தொடங்கினேன்” என்று விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது.

பிஎஸ்பி பெண் தொண்டர் ஒருவர், முன்னேறி வந்து துண்டுப் பிரசுரங்களால் படம் பிடிப்பதைத் தடுக்க முயற்சிப்பதையும் காணொளி காட்டுகிறது.

இரண்டாவது காணொளியில் பிஎஸ்பி தொண்டர் ஒருவர் வலுக்கட்டாயமாக அஸ்மானுடன் தம்படம் எடுக்க முயற்சிப்பதைக் காட்டுகிறது.

“ஒரு பிஎஸ்பி உறுப்பினர் என்னை தொடர்ந்து கேலி செய்தார், அவர் என்னைக் கட்டாயப்படுத்தி தம்படம் எடுக்க முயற்சி செய்தார்,” என்று அந்தக் காணொளிக்குத் தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

அவர்கள் கடந்துசென்றபோது எனக்கு அறை விழுந்தது என்றும் அஸ்மான் காணொளிப் பதிவில் தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மிகவும் பாதிக்கப்பட்டதால் காணொளிகளை வெளியிட முடிவு செய்ததாக அஸ்மான் கூறினார்.

சம்பவத்தன்று இரு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் ஒருவரை ஒருவர் காணொளி எடுத்தனர்.

தானும் தனது குடும்பத்தினரும் சமூக ஊடகங்களில் குறி வைக்கப்பட்டதாகக் கூறிய அஸ்மான், தற்போது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் ‘உண்மை வெளிவரும்’ என்று தான் நம்புவதாகக் கூறினார்.

திரு அஸ்மான், மக்கள் செயல் கட்சியின் தொண்டூழியர் என்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால் அவரது கூற்று, பிஎஸ்பி உறுப்பினரும் முன்னாள் தேர்தல் வேட்பாளருமான எஸ். நல்லகருப்பனின் சம்பவத்தைப் பற்றிய ஃபேஸ்புக் பதிவிலிருந்து மாறுபட்டு இருந்தது.

ஜனவரி 8ஆம் தேதி பிஎஸ்பி கட்சியும் காணொளிகளை வெளியிட்டிருந்தது.

மின்தூக்கியில் பிஎஸ்பி தொண்டூழியர் ஒருவர் எடுத்ததாக நம்பப்படும் காணொளியை பிஎஸ்பி தலைவர் டான் செங் போக் சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொண்டார்.

மசெக தொண்டூழியர் என்று நம்பப்படும் ஒருவர், பிஎஸ்பி தொண்டர்களை தனது கைபேசியால் படம் பிடிக்க முயற்சிப்பதை அந்தக் காணொளி காட்டியது..

குறிப்புச் சொற்கள்