சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீடித்த நிலைத்தன்மை ஆகியவை குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘தூய்மை, பசுமை சிங்கப்பூர்’ தினம் 2026, சனிக்கிழமை (நவம்பர் 21) கம்போங் அட்மிரல்ட்டி, மக்கள் கழகத்தின் உட்லண்ட்ஸ் கேலக்ஸி சமூக மன்றம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
தேசியச் சுற்றுப்புற அமைப்பு, தேசியப் பூங்காக் கழகம், வடமேற்குச் சமூக மேம்பாட்டு மன்றம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“சிங்கப்பூர் சிறிய நாடாக இருப்பதால் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் உலக அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தமாட்டா. இருப்பினும், சிங்கப்பூர்ப் பசுமைத் திட்டம் 2030, மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமையக்கூடும். அதன் மூலம் சிறிய நாடான சிங்கப்பூரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும்,” என்று அவர் கூறினார். இதுவரை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட முயற்சிகளையும் எதிர்காலத் திட்டங்களையும் அவர் விவரித்தார்.
பசுமைத் திட்டத்தின்கீழ், தொழில்துறையின் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கக் கரிம வரி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுப் பேருந்துகள் தூய்மையான எரிசக்தியில் இயங்கும் வகையில் மாற்றப்பட்டு வருகின்றன. 2035ஆம் ஆண்டுக்குள் 1,000 ஹெக்டர் பசுமைப் பகுதிகளை உருவாக்குவதோடு, 2030ஆம் ஆண்டுக்குள் மேலும் ஒரு மில்லியன் மரங்களை நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் நீண்டகாலத் திட்டங்களை வகுக்க தேசியத் தகவமைப்புத் திட்டமும் உருவாக்கப்படுகிறது. இத்திட்டம் 2027ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு, தேவைக்கேற்பத் தொடர்ந்து புதுப்பிக்கப்படும் என்று அமைச்சர் ஓங் தெரிவித்தார்.
இவ்வாண்டு ‘தூய்மை, பசுமை சிங்கப்பூர்’ இயக்கத்தின்கீழ் நாடு முழுதும் 1,200க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 400,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
‘தூய்மை, பசுமை சிங்கப்பூர்’ தினம் 2026ல், சுற்றுச்சூழலுக்கு உகந்த அன்றாடப் பழக்கவழக்கங்களை விளையாட்டுகள் மூலம் கற்றுக்கொள்ளும் வகையில் புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 170க்கும் மேற்பட்டோர் மின்சாரத்தைச் சேமித்தல், பொறுப்புடன் பொருள்களை வாங்குதல், மறுபயனீட்டுப் பொருள்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பயிற்சிகளில் பங்கேற்றனர். ‘தூய்மை, பசுமைப் போட்டியில் பங்கேற்ற குழுக்கள் டெங்கித் தடுப்பு, மறுசுழற்சி போன்றவற்றை உள்ளடக்கிய விளையாட்டுகளில் ஈடுபட்டன.
மூன்று ஆண்டுகளாகச் சுற்றுப்புற அமைப்பின் தொண்டூழியராகப் பணியாற்றும் 37 வயது வசந்தகுமார், குடும்பத்துடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
“டெங்கி விழிப்புணர்வு, கடற்கரை மற்றும் குடியிருப்புப் பகுதிகளைத் தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகளில் நான் ஈடுபட்டு வருகிறேன். முதலில் தொண்டூழியராகச் சேர்ந்து இப்போது தொண்டூழியக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளேன். தொண்டுப் பணிகளில் ஈடுபட்டு நான் கற்றுக்கொண்ட மறுசுழற்சிப் பழக்கவழக்கங்களை என் குடும்பத்தினரிடமும் ஊக்குவிப்பேன், அவர்களும் அவற்றைப் பின்பற்றுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
‘தூய்மை, பசுமை சிங்கப்பூர்’ தினத்துடன் இணைந்து கம்போங் அட்மிரல்ட்டியில் வேலைவாய்ப்புக் கண்காட்சியும் நடைபெற்றது. அதில் நீடித்த நிலைத்தன்மை, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவை வேலைவாய்ப்புத் துறையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து இளையர் அறிந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனுடன், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளச் சிங்கப்பூர் மேற்கொள்ளும் முயற்சிகளை எடுத்துரைக்கும் கண்காட்சியையும் பொதுமக்கள் பார்வையிடலாம்.
இக்கண்காட்சிகள் நவம்பர் 21, 22ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகின்றன.
