சிங்கப்பூரில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டு உள்ள புதிய வர்த்தகக் கூட்டணியின்கீழ், தூய்மை எரிசக்தித் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்க இங்குள்ள நிறுவனங்கள் கூடுதல் உதவியைப் பெற உள்ளன.
அந்த ‘நீடித்து நிலைக்கவல்ல கூட்டணி’, எரிவாயு வெளியேற்றத்திற்கான பசுமை முயற்சிகள் கழிவுகளைக் குறைத்தல் போன்ற தொழிற்கூடம் சார்ந்த நடவடிக்கைகளுக்குக் கைகொடுக்கும். குறிப்பாக, சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அதன் மூலம் பலன் பெறும்.
கூட்டணியின் அதிகாரபூர்வத் தொடக்க நிகழ்வில், சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழிற்சபை (SCCCI) இதனைத் தெரிவித்தது.
வர்த்தகச் சங்கங்கள், அரசாங்க அமைப்புகள், தீர்வு வழங்குநர்கள் போன்றோர் சிறந்த முறையில் வர்த்தகத்தில் ஈடுபடவும் பசுமை நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும் தேவையான யோசனைகளை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை இந்தக் கூட்டணி அடுத்த ஆண்டுக்குள் வெளியிடும்.
கடந்த 2022ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட அந்தக் கூட்டணியின் அதிகாரபூர்வத் தொடக்க நிகழ்வு வியாழக்கிழமை (அக்டோபர் 10) நடைபெற்றது.
கூட்டணிக்கான வளங்களை மேம்படுத்தவும் நிறுவனங்களுக்குப் பொருத்தமான தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தேவைப்படும் முயற்சிகளுக்காக சிங்கப்பூரின் நீடித்து நிலைக்கவல்ல எரிசக்திச் சங்கமும் எஸ்ஜிடெக் நிறுவனமும் இணைந்து பணியாற்றும்.
கூட்டணியின் தொடக்க நிகழ்வில் அதன் நோக்கங்களை நிறைவேற்ற 15 வர்த்தகச் சங்கங்கள் ஒன்றாகக் கைகோத்தன. கூட்டணியில் அங்கம் வகிக்கும் வர்த்தகச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு நீடித்து நிலைக்கும் வர்த்தகம் சார்ந்த பயிற்சிகளை கூட்டணி வழங்கும்.
மேலும், நிறுவனங்கள் பசுமை நடவடிக்கைகளைத் தழுவுவதற்குத் தேவைப்படும் திறன்களை உருவாக்க கூட்டணி உதவும்.
தொடர்புடைய செய்திகள்
பசுமை முயற்சிகளில் வர்த்தகச் சங்கங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழிற்சபையின் இளையர் வர்த்தகப் பிரிவின் தலைவர் மார்க் லீ குறிப்பிட்டார்.

