‘தூய்மையான கழிவறைகளால் அனைவரும் பயன்பெறுவர்’

3 mins read
தனிநபர் முயற்சிகள் மட்டும் போதாது; கழிவறைத் தூய்மையில் அனைவருக்கும் பங்கு உண்டு என வலியுறுத்தும் இயக்கம்
b2d0b08d-7c83-43a9-b80f-94100e75d29a
சிங்கப்பூர்க் கழிவறைச் சங்கத்தின் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்ற செஞ்சா உணவங்காடி நிலையத்தின் கழிவறைகளைப் பார்வையிட்டார் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

தேசிய சுற்றுப்புற வாரியம், பொதுச் சுகாதார மன்றத்தின் ஏற்பாட்டில் ‘தூய்மையான பொதுக் கழிவறைகள் இயக்கம் 2024’ வியாழக்கிழமை (நவம்பர் 21) தொடக்கம் கண்டது.

செஞ்சா உணவங்காடி நிலையத்தில், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் இந்த இயக்கத்தைத் தொடங்கிவைத்தார்.

இவ்வாண்டு இயக்கத்தின் முழக்கவரி, ‘நமது கழிப்பறைகள் சுத்தமாக இருந்தால் நாம் அனைவரும் வெற்றி பெறுகிறோம்!’. கழிவறைச் சுத்தத்திற்கு அனைவரது பங்களிப்பும் முக்கியம் என்பதை இது வலியுறுத்துகிறது.

இந்த இயக்கத்துக்கு சிங்கப்பூர்க் கழிவறைச் சங்கம், சிங்கப்பூர் உணவு அமைப்பு, சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம் உள்ளிட்ட பங்காளிகள் தொடர்ந்து பலத்த ஆதரவு கொடுக்கின்றன.

2024, பொதுச் சுகாதார ஆண்டாக குறிக்கப்பட்டுள்ளது. 2024 தொடக்கத்திலிருந்து, தேசிய சுற்றுப்புற வாரியமும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் பொதுக் கழிவறைச் சுத்த அமலாக்க நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன.

2024 ஜனவரி 1 முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை உணவிடங்கள், ரயில்/பேருந்து நிலையங்கள் போன்றவற்றின் உரிமையாளர்கள்மீது 1,253 அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் எடுக்கப்பட்ட 367 நடவடிக்கைகளைவிட இது மூன்று மடங்கு அதிகம்.

கழிவறை அசுத்தம், உணவுச் சுகாதாரம் தொடர்பான விதிமீறல்களுக்கு தண்டனைப்புள்ளிகள் கட்டமைப்பின்படி, 10 காப்பிக்கடைகளுக்கு சிங்கப்பூர் உணவு அமைப்பு தற்காலிகத் தடை விதித்தது. ஒப்புநோக்க, 2022, 2023ஆம் ஆண்டு ஒவ்வொன்றிலும் ஒரே ஒரு காப்பிக்கடைக்குத்தான் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.

சோப்பு, மெல்லிழைத்தாள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்காததற்கோ கழிவறைகளைச் சுத்தமாக வைத்திருக்காததற்கோ பொதுக் கழிவறை உரிமையாளர்களும் நடத்துநர்களும் (operators) அதிகபட்சம் $500 அபராதத்தைச் செலுத்தினால் வழக்கை நீதிமன்றத்திற்குச் செல்லாமல் தவிர்க்கலாம். அந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால், 1987 சுற்றுப்புறப் பொதுச் சுகாதார சட்டத்தின்படி முதன்முறையாக அதிகபட்சம் $1,000 முதல் $5,000 வரை அபராதம் செலுத்த நேரிடலாம்.

“அமலாக்கம் முக்கியம்; அதைத்தான் அரசாங்கமும் செய்யும். ஆனால், பொதுக் கழிவறைகளை இயக்குபவர்களும் இதில் பங்காற்றுவர் என நம்புகிறோம். ஏனெனில் இதனால் அவர்களும் பயனடைவர்,” என்றார் திரு பே.

பொதுக் கழிவறைகளை இயக்குபவர்களுக்குக் கூடுதல் உந்துதலை வழங்கமுடியுமா என்பது குறித்து பொதுக் கழிவறைகள் செயற்குழு ஆலோசிக்கும் என்றும் அவர் கூறினார்.

ஃபேர்பிரைஸ் குழுமத்தின் கோப்பித்தியாம் இயக்கும் செஞ்சா உணவங்காடி நிலையக் கழிவறைகள் சிங்கப்பூர்க் கழிவறைச் சங்கத்தின் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளன.
ஃபேர்பிரைஸ் குழுமத்தின் கோப்பித்தியாம் இயக்கும் செஞ்சா உணவங்காடி நிலையக் கழிவறைகள் சிங்கப்பூர்க் கழிவறைச் சங்கத்தின் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளன. - படம்: ரவி சிங்காரம்
சிங்கப்பூர்க் கழிவறைச் சங்கத்தின் “இன்பமானக் கழிவறை” திட்டத்தின்கீழ், 643 செஞ்சா கிளோஸ் கோப்பிதியாம் கார்னருக்கும் மூன்று நட்சத்திர மதிப்பீடை நவம்பர் 21ஆம் தேதியன்று திரு பே வழங்கினார்.
சிங்கப்பூர்க் கழிவறைச் சங்கத்தின் “இன்பமானக் கழிவறை” திட்டத்தின்கீழ், 643 செஞ்சா கிளோஸ் கோப்பிதியாம் கார்னருக்கும் மூன்று நட்சத்திர மதிப்பீடை நவம்பர் 21ஆம் தேதியன்று திரு பே வழங்கினார். - படம்: ரவி சிங்காரம்

“தூய்மையான கழிவறைகள், வர்த்தகத்துக்கும் நல்லது. அனைத்துலக ஆய்வுகளின்படி, தூய்மையான கழிவறைகள் கொண்டுள்ள உணவிடத்தில் மக்கள் அதிக நேரம் செலவிட விரும்புகின்றனர்,” என்றார் சிங்கப்பூர்க் கழிவறைச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் சந்தீப் கண்ணா.

பொதுக் கழிவறைகளை இயக்குபவர்களுக்குக் கூடுதல் உந்துதலை வழங்கமுடியுமா என்பது குறித்து பொதுக் கழிவறைகள் செயற்குழு ஆலோசிக்கும்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மற்றும் போக்குவரத்து அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் 

தொடக்கப்பள்ளிகளில் கழிவறை விழிப்புணர்வு

பொதுச் சுகாதார மன்றத்தின் ‘படி கிளீன்’ (Buddy Clean) பயிலரங்கில் 2020 முதல் 13,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இப்பயிலரங்கில் கழிவறைச் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் முன்னோடித் திட்டம் கிளமெண்டி தொடக்கப்பள்ளி, கொங் ஹூவா பள்ளியுடன் மார்ச் 2024ல் தொடங்கியது. இதன்வழி, தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்கநிலை 3,4 மாணவர்கள் தம் பள்ளிக் கழிவறைகளைச் சுத்தப்படுத்தினர்; பின்பு வகுப்புக் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

கிளமெண்டி தொடக்கப்பள்ளி மாணவர்களுடன் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் (பின்வரிசை நடுவில்), வெவ்வேறு அமைப்புத் தலைவர்கள்.
கிளமெண்டி தொடக்கப்பள்ளி மாணவர்களுடன் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் (பின்வரிசை நடுவில்), வெவ்வேறு அமைப்புத் தலைவர்கள். - படம்: ரவி சிங்காரம்

“இதன்மூலம் பள்ளித் துப்புரவாளர்களின் சிரமம் எங்களுக்குப் புரிந்தது,” என்றார் கிளமெண்டி தொடக்கப்பள்ளி மாணவி நூர் ஃபாரா. “இப்பயிலரங்கு அவர்களுக்குத் துப்புரவாளர்களிடம் பணிவாகப் பேசுவது போன்ற நற்பண்புகளையும் வளர்த்துள்ளது,” என்றார் அவரது ஆசிரியர் லெட்சுமி அருணாசலம்.

2025ல் இப்புதிய திட்டம் 15 தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தத் திட்டமிடப்படுகிறது.

கிளமெண்டி தொடக்கப்பள்ளி மாணவி நூர் ஃபாரா, அவரது தாயார் (இடம்), ஆசிரியை லெட்சுமி அருணாசலம் (வலம்).
கிளமெண்டி தொடக்கப்பள்ளி மாணவி நூர் ஃபாரா, அவரது தாயார் (இடம்), ஆசிரியை லெட்சுமி அருணாசலம் (வலம்). - படம்: ரவி சிங்காரம்

வட்டாரக் கழிவறைகள் சமூகக் குழு

ஏப்ரல் 2022ல் பொதுச் சுகாதார மன்றம் ‘வட்டாரக் கழிவறைகள் சமூகக் குழு’த் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இத்திட்டம்வழி, காப்பிக்கடைகளை இயக்குபவர்கள் அவற்றைச் சுத்தப்படுத்தும் வழிமுறையை மேம்படுத்துவர். சமூகத் தொண்டூழியர்கள் கழிவறைத் தூய்மைகளைக் கண்காணித்து, கழிவறைக் கட்டமைப்புகள் சரியாக வேலை செய்யாதபோது இயக்குபவர்களிடம் கூறுவர்.

செப்டம்பர் 2024 முதல் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்துடன் இணைந்து சிராங்கூன், தெம்பனிஸ் பேருந்து நிலையங்களிலும் மெக்ஃபர்சன், கேலாங் பாரு, ஹவ்காங் ரயில் நிலையங்களிலும் இத்திட்டம் தொடங்கியுள்ளது.

“இதுகுறித்த வரவேற்பைப் பொறுத்து, அடுத்தகட்டத்தில் கூடுதல் இடங்களுக்கு விரிவுபடுத்துவோம். இதுவரை சில மேம்பாடுகள் நடந்துள்ளன. ஆனால் இன்னும் அதிகம் தேவை,” என்றார் பொதுச் சுகாதார மன்றத் தலைவர் ஆண்ட்ரூ காங்.

குறிப்புச் சொற்கள்