தொடக்கப் பள்ளி ஒன்றில் 10 வயதுச் சிறுமியை மானபங்கம் செய்த துப்புரவாளருக்கு 11 மாதம், இரண்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
அந்தக் குற்றச்செயல் கடந்த ஆண்டு மே மாதம் நிகழ்ந்தது.
பள்ளியில் இருந்த சிறுமியை 67 வயதான துப்புரவாளர் ஒரே நாளில் இருமுறை மானபங்கம் செய்தார். அவற்றில் ஒரு மானபங்கச் சம்பவம் சிறுமியின் பள்ளித் தோழிகள் தமக்கு அருகில் விளையாடிக்கொண்டு இருந்தபோது நிகழ்ந்தது.
சிறுமியின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு குற்றவாளியைப் பற்றிய விவரங்களை வெளியிட அனுமதி இல்லை.
இரண்டு குற்றச்சாட்டுகளையும் அந்த முதியவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து புதன்கிழமை (மே 14) தண்டனை அறிவிக்கப்பட்டது.
2024 மே 6ஆம் தேதி முற்பகல் 11.15 மணியளவில் பள்ளி ஓய்வுநேரத்தின்போது உணவு விடுதி அருகே சிறுமி நின்றிருந்தபோது அவரை துப்புரவாளர் அழைத்தார். பின்னர், சிறுமியை நோக்கிச் சென்று கட்டித் தழுவினார். தமது உடலை அருவருக்கத்தக்க முறையில் அசைத்தார்.
செய்வதறியாது திகைத்த சிறுமி, ஆடவரின் பிடி தளர்ந்ததும் அங்கிருந்து உணவகத்துக்குள் ஓடினார். சிறுவன் ஒருவர் அங்கு வந்ததும் துப்புரவாளர் அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து 11.30 மணியளவில் சிறுமியை நோக்கிச் சென்று முத்தமிட அவர் முயன்றார்.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் நடந்த விவரங்களை சிறுமி தமது ஆசிரியரிடம் கூறினார்.
சம்பவம் தொடர்பான காணொளிக் காட்சி ஒன்று நீதிமன்றத்தில் புதன்கிழமை (மே 14) காட்டப்பட்டது.
14 வயதுக்குட்பட்ட சிறுமியரை மானபங்கம் செய்வோருக்கு ஐந்தாண்டு வரையிலான சிறை, அபராதம், பிரம்படி ஆகியன விதிக்கப்படலாம். தற்போது சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஆடவர் 50 வயதைக் கடந்தவர் என்பதால் அவருக்குப் பிரம்படி விதிக்க இயலாது.