இரண்டு மாதங்களாக, வாரம் ஏழு நாள்கள் முழுவதும் ஒரு நாளில் 12 மணிநேர வேலை என ரம்ஸான் சலிம் என்பவர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிங்கப்பூர் கடற்கரைகளையும் நீர்நிலைகளையும் சுத்தம் செய்து வந்துள்ளனர்.
சிங்கப்பூர் நீர்நிலைகளும் கடற்கரைகளும் பத்தாண்டுகளில் காணாத எண்ணெய்க் கசிவை அகற்றுவது, எண்ணெய்க் கசடுகளை அள்ளுவது போன்ற பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
ரிசால்வ் மரின் என்ற மீட்பு நிறுவனத்தில் கண்காணிப்பாளராக திரு ரம்ட்ஸான் பணிபுரிகிறார். தினமும் காலை பொழுது விடிந்ததும் எழுந்துவிடுவார். அதைத் தொடர்ந்து லாஸரஸ் தீவுக்கும் செயிண்ட் ஜான்ஸ் தீவுக்கும் இடையேயும் கூசு தீவிலும் காணப்படும் கடலில் வைக்கப்பட்டிருக்கும் மீன்பிடிக் கூண்டுகளுக்கு தமது குழுவினரை அழைத்துச் செல்வார்.
வழக்கமாக 52 வயது திரு ரம்ஸான் நள்ளிரவு 12 மணிவரை விழித்திருப்பார். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக வேலை முடிந்து மிகவும் களைத்துப்போய் எந்தவித ஓய்வுநேரமும் இன்றி இரவு 9.00 மணிக்கே தூங்கப் போய்விடுகிறார்.
இதனால், தமது மகன்களுடன் இந்தக் காலகட்டத்தில் அவர் முகம் பார்த்துப் பேசியது கிடையாது.
ஜூன் 14ஆம் தேதி இழுவைப் படகு ஒன்று கடலில் நங்கூரமிட்டிருந்த எண்ணெய்க் கப்பலுடன் மோதியதால் கடலில் 400 டன் எண்ணெய் கசிந்தது. இதைத் தொடர்ந்து திரு ரம்ஸானைப் போல் பலரும் எண்ணெய்க் கசிவை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
பல நூற்றுக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோரின் உதவியால் ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா பகுதியில் உள்ள கடற்கரைகள், செந்தோசா தீவிலுள்ள சிலோசோ கடற்கரை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு அகற்றப்பட்டது. தற்பொழுது சிங்கப்பூரின் தென் தீவுகளில் எண்ணெய்க் கசிவை அகற்றும் பணி ஒருவாறு முடிந்துள்ளது.
இந்தத் துப்புரவுப் பணியில் குறைந்தது 1,000 ஊழியர்கள் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

