தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டுத் தலையீட்டைத் தெளிவாக நிராகரிக்க வலியுறுத்து

3 mins read
2b842d40-62f9-4276-b8fd-d93127dfa89f
சிங்கப்பூரின் அரசியல் செயல்பாட்டில் தலையிடும் வெளிநாட்டு அமைப்புகளின் முயற்சிகளை அரசியல் கட்சிகள் உடனடியாக நிராகரிக்கும் என்று தாம் நம்புவதாக தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமயத்தையும் அரசியலையும் கலப்பதை நிராகரிக்கவும், சிங்கப்பூரின் அரசியல் செயல்பாட்டில் வெளிநாட்டினர் தலையிடும் முயற்சிகளை முறியடிக்கவும் அரசியல் கட்சிகள் விரைவாகவும் தெளிவாகவும் முன்வர வேண்டும் என்று தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.

2025 பொதுத் தேர்தலின்போது, சிங்கப்பூர் வாக்காளர்கள் தனக்குச் சாதகமாக வாக்களிப்பதற்கான இத்தகைய முயற்சிகளுக்குப் பாட்டாளிக் கட்சி அளித்த பதிலை மேற்கோள் காட்டி, தேர்தல் பிரசாரக் காலம் போன்ற ஒரு முக்கியமான நேரத்தில், எந்தவொரு தாமதமும் தெளிவின்மையையும் கேள்விகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தக்கூடும் என்று திரு சண்முகம் நாடாளுமன்றத்தில் விளக்கினார்.

செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) அன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அமைச்சர்நிலை அறிக்கையில், சிங்கப்பூரர்கள் தேர்தலில் இன மற்றும் சமய அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் என்று சுய போதனையாளர் ஒருவர் அழைப்பு விடுத்தபோது, ​​அதற்குப் பாட்டாளிக் கட்சி பதிலளித்த நேரம் மற்றும் உள்ளடக்கம் குறித்து திரு சண்முகம் விமர்சித்தார்.

மலேசிய அரசியல்வாதிகள் சிலர் சமூக ஊடகங்களில் பாட்டாளிக் கட்சியின் வேட்பாளரை வெளிப்படையாக ஆதரித்தபோது அக்கட்சியின் பதில் நடவடிக்கை குறித்து அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

உள்துறை அமைச்சருமான திரு சண்முகம், 2025 பொதுத் தேர்தலில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தலைமையிலான மக்கள் செயல் கட்சி அணியை எதிர்த்துப் போட்டியிட, பாட்டாளிக் கட்சி அதன் தெம்பனிஸ் அணியை வழிநடத்த கட்சியின் துணைத் தலைவர் பைசல் மனாப்பை நிறுத்தியதாகக் குறிப்பிட்டார்.

“குறிப்பாக மலாய்/முஸ்லிம் வாக்குகள் குறிவைக்கப்பட்டது தெளிவாகத் தெரிந்தது. அது சிங்கப்பூரர்களுக்கு மட்டுமல்ல, மலேசியப் பார்வையாளர்களுக்கும் தெளிவாகத் தெரிந்தது,” என்று அவர் கூறினார்.

ஏப்ரல் 23 அன்று, சிங்கப்பூரைச் சேர்ந்த இஸ்லாமிய சமயப் போதகர் நூர் டெரோஸ் இரண்டு ஃபேஸ்புக் பதிவுகளை வெளியிட்டார். அதில் திரு பைசல், திரு மசகோஸை விட மலாய்/முஸ்லிம் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பவராகச் சித்திரிக்கப்பட்டார்.

சமயத்தையும் அரசியலையும் கலப்பதால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைக்கும் வகையில், உள்துறை அமைச்சும் தேர்தல் துறையும் ஏப்ரல் 25 அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டன.

பின்னர் ஏப்ரல் 26 அன்று பிரதமர் லாரன்ஸ் வோங் ஒரு செய்தியாளர் சந்திப்பைக் கூட்டினார். அங்கு அவர் சிங்கப்பூரர்களை அரசியலில் இனத்தையும் சமயத்தையும் கலப்பதற்குக் கொண்டுவரும் முயற்சிகளை நிராகரிக்குமாறு அழைப்பு விடுத்தார். மேலும், அனைத்து அரசியல் கட்சிகளும் இரண்டு கொள்கைகளில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சிங்கப்பூரில் அடையாள அரசியலுக்கு இடமில்லை; சிங்கப்பூர் ஒருபோதும் சமயத்தையும் அரசியலையும் கலக்கக்கூடாது ஆகியவையே அவ்விரண்டு கொள்கைகள்.

அதே நாளில், பாட்டாளிக் கட்சி தனது சொந்த அறிக்கையை வெளியிட்டது. அதில் தங்கள் கட்சிக்கு அரசியல் ஆதரவு திரட்டும் வகையில், திரு நூருக்கு தாங்கள் எந்த வாக்குறுதிகளோ உறுதிமொழிகளோ கொடுக்கவில்லை அல்லது ஒப்பந்தங்கள் செய்துகொள்ளவில்லை என்று அது கூறியது.

ஏப்ரல் 26 அன்று அதன் அறிக்கை, திரு நூர், பாட்டாளிக் கட்சி உடனான தனது சந்திப்புகளைப் பகிரங்கப்படுத்திய இரண்டு நாள்களுக்குப் பிறகு வந்தது. மேலும் தேர்தல் துறை மற்றும் உள்துறை அமைச்சு ஆகியவற்றின் அறிக்கைக்குப் பிறகு வந்தது.

“இது, ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தல் பிரசாரக் காலத்தில் வந்தது,” என்று அமைச்சர் கூறினார். “இவ்வளவு முக்கியமான விவகாரத்தில் பாட்டாளிக் கட்சி ஏற்படுத்திய இந்த தாமதம் பல கேள்விகளை எழுப்புகிறது,” என்றும் திரு சண்முகம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்