சிங்கப்பூரில் 41 வயது ஆடவர் ஒருவர் மரணமடைந்தது தொடர்பில் மற்றோர் ஆடவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
முன்னதாக, கிளமெண்டி அவென்யூ 4ல் வீவக புளோக் ஒன்றின் வெற்றுத்தளத்தில் ஓர் ஆடவர் உணர்வற்றுக் கிடந்தது காணப்பட்டது.
அதன் தொடர்பில் இன்று (அக்டோபர் 21) மாலை 5 மணியளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாக காவல்துறை கூறியது.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆடவர், அங்கு மாண்டதாகவும் அது கூறியது.
மாண்ட ஆடவரும் சம்பவ இடத்தில் கைதான 50 வயது ஆடவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்தில் கண்ணீர்மல்கக் காணப்பட்ட முதிய ஆண் மற்றும் பெண்ணை, ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஆன் ஆறுதல் கூறி தேற்றியதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் கண்டார்.
இதற்கிடையே, கிளமெண்டி அவென்யூ 4 புளோக் 311பி-யில் இருந்து மாலை 5 மணியளவில் தனக்கு அழைப்பு வந்ததாகவும் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு ஒருவர் கொண்டு செல்லப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
இலேசான காயமடைந்த மற்றொரு நபர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்ததாகவும் அது தெரிவித்தது.