யீப் போக்குவரத்து நிறுவனத்தின் நிறுவனரின் திடீர் மரணம் சில பள்ளிகளையும் அந்நிறுவனத்தில் பணிப்புரிந்த ஊழியர்களையும் செய்வதறியா திகைக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
பெய் சுன் பொதுப்பள்ளியும் சீடார் தொடக்கப்பள்ளியும் 2025 கல்வியாண்டிற்கான பேருந்து சேவையை வழங்க புதிய ஒப்பந்ததாரரை நியமித்துள்ளன. அதன் முந்தைய ஒப்பந்ததாரரான யீப் போக்குவரத்து நிறுவனம் கடந்த நவம்பர் மாதத் தொடக்கத்தில் திடீரென மூடப்பட்டது.
நிறுவனர் மாண்டதால் அந்த நிறுவனம் மூடப்பட்டது என அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் மாண்ட காரணம் குறித்து இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை.
யீப் போக்குவரத்து நிறுவனத்தின் நிறுவனரான திரு அட்ரியன் யீப்பின் இறுதிச் சடங்கு அக்டோபர் 29ஆம் தேதி நடந்ததாக அந்த நிறுவனம் சமூக ஊடகப் பதிவுகளில் தெரிவித்தது.
நிறுவனம் திடிரென மூடப்பட்டதால், அதில் பணிபுரிந்த ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர். சிலர் தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
யீப் போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றிய சில ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை என்பது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தங்களுக்கு அக்டோபர் 30ஆம் தேதி தகவல் கிடைத்தது எனத் தேசிய போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் கூறியது.
நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஊழியர்களைச் சங்கம் நவம்பர் 11ஆம் தேதி சந்தித்து பேசியது.
யீப் நிறுவனம் ஊழியர்கள் சங்கத்தில் தங்களை இணைத்துகொள்ளாததால், அதன் அனைத்து ஊழியர்களையும் அதிகாரத்துவமாக சங்கம் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது எனக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அந்நிறுவனத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 30 ஊழியர்கள் தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் வேலை நியமன, வேலைத்தகுதிக் கழகத்தில் நடந்த சந்திப்பில் பங்கேற்றனர். அங்கு அவர்களுக்குப் பொருத்தமான வேலை, அதற்கு வேண்டிய பயிற்சி, ஆதரவு ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலுவையில் இருக்கும் சம்பளத்தைப் பெறுவதற்காக செயல்முறைகளிலும் உதவியதாக சங்கம் தெரிவித்துள்ளது.
நிறுவனம் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட சில ஊழியர்கள் ஏற்கனவே அதே துறையில் வேறு நிறுவனத்தில் வேலை பெற்றுள்ளனர் என்பதைச் சங்கம் புரிந்துகொள்வதாக அது கூறியது.

