பான விநியோக நிறுவனமான ‘புரூஃப் & கம்பனி ஸ்பிரிட்ஸ்’ (Proof & Company Spirits) அதன் சிங்கப்பூர் கிளையை மூடியுள்ளது.
உணவு, பானத் துறையில் நிலவும் சவால்கள் தாங்கள் மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதற்கான காரணங்களில் அடங்கும் என்று ‘புரூஃப் & கம்பனி ஸ்பிரிட்ஸ்’ தெரிவித்தது.
“சிங்கப்பூர் உணவு, பான மற்றும் விருந்துபசரிப்புத் துறைகளில் சவால்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்துடன் ஆக அதிக காலம் வர்த்தகம் செய்துவந்த சில உணவகங்கள், மதுபானக் கூடங்கள் மூடப்பட்டுள்ளது அத்தகைய சவால்களில் அடங்கும்,” என்று ‘புரூஃப் & கம்பனி ஸ்பிரிட்ஸ்’ திங்கட்கிழமை (ஜூலை 21) அறிக்கையில் குறிப்பிட்டது. தங்கள் சிங்கப்பூர் கிளை மூடப்படுவதால் இங்குள்ள அதன் ஊழியர்கள் அனைவரும் வேலை இழப்பர் என்று அது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.
ஆக அண்மைய நிலவரப்படி ‘புரூஃப் & கம்பனி ஸ்பிரிட்ஸ்’, சிங்கப்பூரில் ஆண்டுதோறும் ஏழு மில்லியன் வெள்ளி மதிப்பிலும் உலகளவில் 34 மில்லியன் வெள்ளி மதிப்பிலுமான வர்த்தகத்தில் ஈடுபட்டது. கடந்த 10 ஆண்டுகளில் அது, சிங்கபபூரிலும் ஆசிய பசிபிக் வட்டாரத்திலும் 50க்கும் மேற்பட்ட பான வகைகளை விநியோகித்து வந்துள்ளது.
அண்மைக் காலமாக சிங்கப்பூரில் அதிகமான உணவு, பானக் கடைகள் மூடிவருகின்றன. சென்ற ஆண்டு 3,047 உணவு, பானக் கடைகள் மூடின. 2005ஆம் ஆண்டில் 3,790 உணவுக் கடைகள் மூடப்பட்ட பிறகு இந்த எண்ணிக்கையிலான உணவுக் கடைகள் மூடப்படவில்லை.