பொதுப் பொழுதுபோக்கு நிலையங்களின் ஊழியர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகளுடன் பிடிபட்டால், அந்த பொழுதுபோக்கு நிலையங்கள் அவற்றின் உரிமத்தை இழக்க நேரிடும்.
செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து எட்டோமிடெட் ‘சி’ வகை போதைப் பொருளாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகள் அதன் வளாகத்திற்குள் கொண்டுவரப்படாததை உறுதிசெய்யும் பொறுப்பு பொழுதுபோக்கு நிலையத்தின் கையில் உள்ளது என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
“தற்போதுள்ள உரிம நிபந்தனைகளின் ஒரு பகுதியாக, பொதுப் பொழுதுபோக்கு நிலையங்கள் தங்கள் வளாகத்தில் எட்டோமிடேட் உள்ளிட்ட கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளின் விற்பனை, புழக்கம் அல்லது கடத்தல் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்ய அனைத்து தகுந்த நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்,” என்று அவர் கூறினார்.
பிடிபட்டால், பொதுப் பொழுதுபோக்கு நிலையங்கள் விசாரிக்கப்பட்டு, அவற்றின் உரிமத்தை இடைநிறுத்த அல்லது ரத்து செய்ய வழிவகுக்கும் தண்டனைப் புள்ளிகள் வழங்கப்படும் என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
உரிமதாரர், விற்பனை நிலைய நடத்துநர், வர்த்தக உரிமையாளர் அல்லது பங்குதாரர் போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுடன் பிடிபட்டால் நிலையத்தின் உரிமம் உடனடியாக இடைநிறுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.