மலேசியாவில் விபத்து; சேனல் நியூஸ் ஏஷியா ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு

மலேசியாவில் விபத்து; சேனல் நியூஸ் ஏஷியா ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு

1 mins read
4ad49a1b-a82c-4e78-b6ff-a91e52950cdf
திரு கைருல் ஸைனுதீன், 45. படம்: கிரோல்ஃபிஃப்டிஃபைவ் / ஃபேஸ்புக் -

சிங்கப்பூரின் 'சேனல் நியூஸ் ஏஷியா (சிஎன்ஏ)' ஊடக ஒளிப்பதிவாளர் ஒருவர் ஜூன் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மலேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த மோட்டார்சைக்கிள் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

திரு கைருல் ஸைனுதீன், 45, காராக் - கோலாலம்பூர் நெடுஞ்சாலையில் சென்றபோது, அவரது மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பின்மீது மோதியதாக 'நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி தெரிவித்தது.

அதனால், சாலைத்தடுப்பின் எதிர்ப்பக்கத்தில் திரு கைருல் தூக்கி வீசப்பட்டார். அப்போது, அவ்வழியே 46 வயது ஆடவர் ஒருவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் திரு கைருலின்மீது மோதியதாக மாவட்டக் காவல்துறைத் தலைவர் கூறினார்.

இதனால் தலையில் பலத்த காயமுற்ற திரு கைருல், நிகழ்விடத்திலேயே மாண்டுபோனார்.

விமான நிலையத்திலிருந்து தம் மனைவியை அழைத்து வருவதற்காகத் திரு கைருல் கோலாலம்பூருக்குச் சென்றுகொண்டிருந்ததாக சிஎன்ஏ தெரிவித்தது. வாரயிறுதியில் குவந்தானில் உள்ள தம் பெற்றோரைப் பார்த்துவிட்டு, அங்கிருந்து மூன்று மணி நேரப் பயணத் தொலைவிலுள்ள கோலாலம்பூருக்கு அவர் சென்றுகொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.

திரு கைருல் காணொளித் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தார். மலேசியாவில் அருகிவரும் விலங்குகள் தொடர்பில் எடுக்கப்பட்டு, விருதுபெற்ற காணொளித் தயாரிப்புக் குழுவில் அவரும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.