மார்சிலிங் வட்டாரத்தில் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மூத்தோரின் முகங்களில் சீனப் புத்தாண்டு களைகட்டியது.
அவ்வட்டாரத்தில் இருக்கும் சன்லவ் துடிப்புடன் மூப்படைதல் நிலையத்தின் ஏற்பாட்டில் முப்பதுக்கும் மேற்பட்ட மூத்தோருக்கு சீனப் புத்தாண்டு இரவு உணவு வழங்கப்பட்டது.
அங்குள்ள ஓர் உணவங்காடி நிலையத்தில் கடந்த புதன்கிழமை (ஜனவரி 22) மாலையில் இந்த விருந்து நிகழ்ச்சி இடம்பெற்றது. தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சரும், மார்சிலிங் - இயூ டி குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஸாக்கி முகம்மது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மூத்தோருடன் உணவருந்தினார்.
உணவு விருந்தின்போது சீனப் புத்தாண்டுக்கு முக்கியமாக இடம்பெறும் ‘லோ ஹே’ சடங்கும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து, அனைவரும் பல்வேறு உணவு வகைகளை சுவைத்து மகிழ்ந்தனர்.
“நான் முதலில் சன்லவ் நிலையத்திற்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும். இங்கு மூத்தோர் அனைவரும் ஒன்றுபட்டு உள்ளனர். வெவ்வேறு இனத்தவராக இருந்தாலும் அவர்கள் ஒன்றாக இருப்பது நம் நாட்டின் பல்லினக் கலாசாரத்தை எடுத்துக்காட்டுகிறது. இங்கு இருக்கும் மூத்தோரில் சிலருக்கு இதுபோன்ற உணவு வகைகளை சாப்பிடுவதற்கான வாய்ப்பு அதிகமாகக் கிடைக்காது. சிலர் குறைந்த வருமானக் குடும்பங்களிலிருந்து வருகின்றனர்,” என்று அமைச்சர் ஸாக்கி கூறினார்.
“நான் பல ஆண்டுகளாகத் தனியாக வசிக்கிறேன். என்னைப் போன்ற மூத்தோருக்கு பல உதவிகள் வழங்கப்படுகின்றன. எங்களுக்கு நாள்தோறும் இதுபோன்ற உணவு வகைகளை வழங்கி, உதவி வருகிறார்கள். இந்தச் சமூக ஒன்றுகூடல்களை நான் பெரிதும் விரும்புகிறேன். தனியாக இருப்பதால் இதர மூத்தோரைச் சந்தித்து அவர்களுடன் பேசி மகிழ்வது தனி இன்பந்தான்,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் திரு ராஜா, 72.