அண்மைய ஏலக்குத்தகையில் பெரும்பாலான பிரிவுகளுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் உயர்ந்துள்ளது.
புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 19) நடைபெற்ற ஏலக்குத்தகையில், ‘ஏ’ பிரிவுச் சான்றிதழின் விலை 3.7 விழுக்காடு அதிகரித்து $128,501 ஆகப் பதிவாகியுள்ளது. இது, கடந்த ஜூலை மாதம் பதிவான $129,000 என்ற உச்சபட்ச விலையை நெருங்கியுள்ளது.
சிறிய, குறைந்த இயந்திரத் திறன் கொண்ட கார்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான ‘ஏ’ பிரிவுக் கட்டணம், ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற்ற முந்தைய ஏலக் குத்தகையில் $123,890 ஆக இருந்தது. தற்போது அது $4,611 அதிகரித்து $128,501 ஐ எட்டியுள்ளது.
பெரிய, அதிக இயந்திரத் திறன் கொண்ட கார்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான ‘பி’ பிரிவுக் கட்டணம், $129,910லிருந்து 0.8 விழுக்காடு அதிகரித்து $131,001 ஆக உயர்ந்துள்ளது.
மோட்டார்சைக்கிள்களுக்கான ‘டி’ பிரிவுக் கட்டணம் 7.6 விழுக்காடு உயர்ந்து, $10,503லிருந்து $11,301 ஆகப் பதிவாகியுள்ளது. இத்தகைய சான்றிதழ்களின் விலை ஐந்து இலக்கத் தொகையைத் தாண்டியது இது தொடர்ந்து நான்காவது முறையாகும். 2026ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் ஆறு முறை இவ்வாறு நிகழ்ந்துள்ளது.
பொதுப் பிரிவான ‘இ’ பிரிவுக் கட்டணம் 3.1 விழுக்காடு உயர்ந்து, $131,000லிருந்து $135,000ஆக அதிகரித்துள்ளது. மோட்டார்சைக்கிள்களைத் தவிர்த்து பிற வாகனப் பதிவுகளுக்கு இச்சான்றிதழ்களைப் பயன்படுத்தலாம் என்றாலும், இவை பெரும்பாலும் பெரிய கார்களுக்கே பயன்படுத்தப்படுகின்றன. இச்சான்றிதழ்களை மற்றவர்களுக்கு மாற்ற முடியும் என்பதால், அடுத்த ஏலக்குத்தகை வரை காத்திருக்காமல் வாகனங்களைப் பதிவு செய்யும் நீக்குப்போக்குத்தன்மைக்காக வணிகர்கள் இவற்றை முன்கூட்டியே பெற்றுக்கொள்கின்றனர்.
அதேவேளையில், வணிக வாகனங்களுக்கான ‘சி’ பிரிவுக் கட்டணம் 1.7 விழுக்காடு குறைந்து, $91,545லிருந்து $90,002ஆகச் சரிந்துள்ளது. சிங்கப்பூரில் வாகனம் சொந்தமாக வைத்திருப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டாயமாகும்.


