சிங்கப்பூரில் வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் அனைத்துப் பிரிவுகளிலும் லேசாகக் குறைந்துள்ளது.
செப்டம்பர் தொடக்கத்தில் ‘ஏ’ பிரிவு வாகனங்களுக்கான சான்றிதழ்க் கட்டணம் $133,009 வரை உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. இந்நிலையில், புதன்கிழமை (செப்டம்பர் 23) நடந்த ஆக அண்மைய ஏலத்தில் அதன் கட்டணம் 0.8 விழுக்காடு சரிந்து $131,890 ஆனது. சிறிய கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்கும் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்படுகிறது.
பெரிய கார்களுக்கான ‘பி’ பிரிவுச் சான்றிதழ்க் கட்டணம் 1.5 விழுக்காடு குறைந்து $133,000 ஆனது. மோட்டார்சைக்கிள்களுக்கான ‘டி’ பிரிவு ‘சிஓஇ’ கட்டணம் 2.8 விழுக்காடு சரிந்து $12,201ஆகப் பதிவானது.
வர்த்தக வாகனங்களுக்கான ‘சி’ பிரிவுச் சான்றிதழ்க் கட்டணமும் சரிந்து $92,144 ஆகப் பதிவானது. மோட்டார்சைக்கிள் தவிர்த்த மற்ற வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் பொதுப் பிரிவுச் சான்றிதழ்க் கட்டணம் 0.6 விழுக்காடு குறைந்து $137,000ஆகப் பதிவானது.
சிங்கப்பூரில் வாகனம் வைத்திருக்க இந்தச் சான்றிதழ் அவசியமாகும். தற்போதுள்ள சான்றிதழ் முறையை மேம்படுத்த அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வாகன ஓட்டிகள், விற்பனையாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் கருத்துகளைப் பெற்று நடத்தப்படும் இந்த ஆய்வு, 2026 இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
