மோட்டார்சைக்கிள்கள் தவிர்த்து மற்ற எல்லாப் பிரிவு வாகனங்களுக்குமான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் குறைந்தது.
புதன்கிழமை (ஜூன் 4) நடைபெற்ற ஏலக்குத்தகையில் ‘ஏ’ பிரிவில் உள்ள சிறிய, ஆற்றல் குறைவான கார்கள், மின்சாரக் கார்கள் ஆகியவற்றுக்கான சிஓஇ கட்டணம் ஆகப் பெரிய அளவில் சரிந்தது. இதற்குமுன் இருந்த $102,501 கட்டணம் தற்போது 5.4 விழுக்காடு குறைந்து $96,999ஆனது.
‘பி’ பிரிவில் உள்ள பெரிய, ஆற்றல்மிக்க கார்களுக்கான கட்டணம் $116,988லிருந்து 3.4 விழுக்காடு குறைந்து $113,000ஆனது.
கார்களுக்கான சிஓஇ கட்டணம் தொடர்ச்சியாக இரண்டாவது முறை குறைந்துள்ளது. இருப்பினும், ஓராண்டுக்குமுன் ஒப்புநோக்க அதற்கான சிஓஇ கட்டணம் அதிகமாக உள்ளது.
பொதுப் பிரிவு (இ பிரிவு) வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் $118,010லிருந்து 3.5 விழுக்காடு சரிந்து $113,900ஆகப் பதிவானது.
அதுபோல, ‘சி’ பிரிவில் வரும் வணிக வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் 1.9 விழுக்காடு குறைந்தது. முந்திய ஏலக்குத்தகையில் $63,189ஆக இருந்த அக்கட்டணம், தற்போது $62,000ஆகக் குறைந்துள்ளது.
‘டி’ பிரிவில் வரும் மோட்டார்சைக்கிள்களுக்கான சிஓஇ கட்டணம் $8,707லிருந்து 3.4 விழுக்காடு அதிகரித்து $9,000ஐத் தொட்டது.