தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய உச்சம் தொட்டது சிறிய கார்களுக்கான ‘சிஓஇ’ கட்டணம்

1 mins read
d28680db-05d4-44d5-bbd7-722375ba5660
மின்வாகனங்களுக்கான சலுகைகள் 2026 ஜனவரி முதல் அகற்றப்படும் என்ற அறிவிப்புக்குப் பிறகு செப்டம்பரிலிருந்தே வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணங்கள் வெகுவாகக் கூடிவருகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ்க் (சிஓஇ) கட்டணம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. புதன்கிழமை (அக்டோபர் 8) வெளியிடப்பட்ட தகவலின்படி அது $128,105ஐ எட்டியது. இதற்கு முந்திய ஏலத்துடன் ஒப்பிடுகையில் அது 7.6 விழுக்காடு அதிகம்.

தொடர்ந்து மூன்றாம் முறையாக சிறிய கார்களுக்கான ‘ஏ’ பிரிவில் சிஓஇ கட்டணம் கூடியுள்ளது. இதற்கு முன் அது $119,000ஆக இருந்தது.

பெரிய, ஆற்றல் அதிகமுள்ள கார்களுக்கும் மின்வாகனங்களுக்குமான ‘பி’ பிரிவுக்கான கட்டணம் $141,000. ஈராண்டில் அதுவே அதிகம். கடந்த ஏலத்தைக் காட்டிலும் அது 3 விழுக்காடு அதிகம். சென்ற முறை கட்டணம் $136,890ஆகப் பதிவாகியிருந்தது.

‘சிஓஇ’ கட்டணங்கள் கூடியதற்குச் சில காரணங்களைக் குறிப்பிட்டது நிலப் போக்குவரத்து ஆணையம். அண்மை ஏலத்துக்கும் முந்தைய ஏலத்துக்கும் இடைவெளி மூன்று வாரம். வழக்கமாக அது இரண்டு வாரமாக இருக்கும் என்று ஆணையம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. சென்ற மாதம் (செப்டம்பர் 2025) நடைபெற்ற கார் கண்காட்சியும் ஒரு காரணம் என்றது அறிக்கை.

மோட்டார்சைக்கிள்கள் தவிர்த்த மற்ற வாகனங்களுக்கான பொதுப் பிரிவில் சிஓஇ கட்டணம் $140,009ஆகப் பதிவானது. சென்ற முறையைவிட அது சற்றுக் குறைவு. கடந்த ஏலத்தில் அது $140,502ஆக இருந்தது.

சரக்கு வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் $74,301. முந்தைய ஏலத்தில் பதிவான $72,501ஐக் காட்டிலும் அது 2.5 விழுக்காடு அதிகம்.

மோட்டார்சைக்கிள்களைப் பொறுத்தவரை கட்டணம் 6.5 விழுக்காடு கூடுதலாகி $9,810 ஆனது.

குறிப்புச் சொற்கள்