வர்த்தக வாகனப் பிரிவைத் தவிர மற்ற எல்லா வாகனப் பிரிவுகளிலும் வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்கள் நவம்பர் 20ஆம் தேதி சரிந்தன.
சிறிய கார்களுக்கான பிரிவில் சிஓஇ கட்டணம் $10,000 குறைந்து $89,889 எனப் பதிவானது.
இது 10% சரிவாக இருப்பதுடன் சிறிய வகை கார்களுக்கான ‘ஏ’ பிரிவின் சிஓஇ கட்டணம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏலத்தில் சரிவைச் சந்தித்திருக்கிறது.
அத்துடன் ஜனவரி மாதம் தொடங்கிய முதல் ஏலத்தை அடுத்து சிறிய, ஆற்றல் குறைந்த கார்களையும் மின்சார வாகனங்களையும் (EV) உள்ளடக்கிய ‘ஏ’ பிரிவில், பதிவாகியுள்ள ஆகப் பெரிய சரிவு இது.
பெரிய, ஆற்றல்மிகுந்த கார்களையும் மின்சார வாகனங்களையும் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் ‘பி’ பிரிவு சிஓஇக்கான கட்டணம் முன்பிருந்த $108,001லிருந்து 2.7% குறைந்து $105,081ஆகப் பதிவானது.
பொதுப் பிரிவு அதாவது ‘இ’ பிரிவில் சிஓஇ கட்டணம் 1.4 விழுக்காடு சரிவு பதிவானது. அதன் சிஓஇ கட்டணம் $109,000லிருந்து $107,501க்குக் குறைந்தது.
மோட்டார்சைக்கிள்களுக்குரிய ‘டி’ பிரிவில் 4.6% சரிவு பதிவானது. முந்தைய ஏலத்தில் பதிவான $9,089 அண்மைய ஏலத்தில் $8,669ஆக பதிவானது.
வர்த்தக வாகன (சி பிரிவு) சிஓஇ கட்டணம் மட்டுமே அதிகரித்தது. இரண்டு வாரங்களுக்கு முன் பதிவான $68,340, 1% அதிகரித்து $69,000 எனப் பதிவானது.
சிங்கப்பூரில் வாகனப் பயன்பாட்டைப் பதிவுசெய்ய சிஓஇ தேவை.