சிறிய, பெரிய வகை கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் (சிஓஇ) குறைந்துள்ளது.
இதற்கு முன்பு நடைபெற்ற மூன்று ஏலக்குத்தகைகளில் அவை உச்சத்தை எட்டின என்பது குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழமை (அக்டோபர் 23) நடைபெற்ற ஏலக்குத்தகையில், சிறிய வகை கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் 4.8 விழுக்காடு குறைந்தது.
அது $128,105லிருந்து $122,000ஆகக் குறைந்தது.
இப்பிரிவுக்கான கட்டணம் ஜூன் மாதத்தில் $96,999ஆக இருந்தது.
அதன் பிறகு தற்போதுதான் அது குறைந்துள்ளது.
பெரிய வகை கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் 6.5 விழுக்காடு குறைந்து $131,889ஆகப் பதிவானது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு சிறிய, பெரிய வகை கார்களுக்கான கட்டணம் மேலும் உயர்ந்ததை அடுத்து, கார் விற்பனைக்கூடங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததாக வாகன விற்பனையாளர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
பொதுப் பிரிவுக்கான கட்டணம் 2.9 விழுக்காடு குறைந்தது.
அது $140,009லிருந்து $136,000ஆகச் சரிந்தது.
மோட்டார் சைக்கிள்களைத் தவிர மற்ற வாகனங்களுக்கு இக்கட்டணத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் அப்பிரிவு பெரும்பாலும் பெரிய கார்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் அதிகரித்துள்ளது. அது 3.4 விழுக்காடு உயர்ந்து $76,801ஆகப் பதிவானது.
மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணம் 4.3 விழுக்காடு சரிந்து $9,389ஆகப் பதிவானது.

