மோட்டார்சைக்கிள்கள் தவிர அனைத்துப் பிரிவுகளிலும் வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்கள் புதன்கிழமை (ஆகஸ்ட் 20) அதிகரித்தன. சிறிய, குறைந்த ஆற்றலுடைய கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்குமான கட்டணம் $104,524ஐ எட்டியது.
சிறிய, குறைந்த ஆற்றலுடைய கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்குமான (‘ஏ’ பிரிவு) சிஓஇ கட்டணம், முந்தைய ஏலக்குத்தகையுடன் ஒப்பிடும்போது 2.5 விழுக்காடு அதிகரித்து $102,009லிருந்து $104,524ஆக உயர்ந்தது.
இது, 2023 அக்டோபரில் நடந்த இரண்டாவது ஏலக்குத்தகைக்குப் பிறகு பதிவாகியுள்ள ஆக அதிகக் கட்டணமாகும். 2023 அக்டோபரில் இப்பிரிவுக்கான கட்டணம் $106,000ஆக இருந்தது.
மேலும், தொடர்ச்சியாக நான்காவது ஏலமாக ‘ஏ’ பிரிவு சிஓஇ கட்டணம் $100,000ஐத் தாண்டியுள்ளது.
பெரிய, அதிக ஆற்றல்வாய்ந்த கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்குமான ‘பி’ பிரிவு கட்டணம், $124,400ஆக பதிவானது. இதற்கு முந்தைய ஏலக்குத்தகையில் இருந்த $123,498லிருந்து இது 0.7 விழுக்காடு அதிகம்.
பொதுப் பிரிவுக்கான (‘இ’ பிரிவு) சிஓஇ கட்டணம் $125,001ஆகக் கூடியது. இது, முந்தைய ஏலக்குத்தகையின் $122,334ஐ விட 2.2 விழுக்காடு அதிகம்.
பொதுப் பிரிவு சான்றிதழ்களை மோட்டார்சைக்கிள்கள் தவிர வேறெந்த வாகன வகைக்கும் பயன்படுத்தலாம். ஆனால், பொதுவாக இவை பெரிய, கூடுதல் ஆற்றலுடைய கார்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன.
வணிக வாகனங்களுக்கான (‘சி’ பிரிவு) சிஓஇ கட்டணம் 3.1 விழுக்காடு அதிகரித்து, $70,001லிருந்து $72,190ஆக உயர்ந்தது.
மோட்டார்சைக்கிள்களுக்கான (‘டி’ பிரிவு) கட்டணம் மட்டும் இந்தப் போக்குக்கு மாறாக 4.1 விழுக்காடு குறைந்தது. அது $9,189லிருந்து $8,809ஆக சரிந்தது.