வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்கள் புதன்கிழமை (மார்ச் 19) நிறைவுற்ற ஏலக்குத்தகையில் எல்லாப் பிரிவுகளிலும் ஏற்றம் கண்டன.
குறிப்பாக, ‘பி’ பிரிவுக்கான கட்டணம் $116,890க்கு உயர்ந்தது. இரு வாரங்களுக்கு முன்பு இடம்பெற்ற இதற்கு முந்திய ஏலத்தில் அப்பிரிவுக்கான கட்டணம் $113,000ஆக இருந்தது. ஆக அண்மையக் கட்டணம் அதைவிட 3.4 விழுக்காடு அதிகம். அப்பிரிவில் 2023 டிசம்பருக்கு ($130,100) பிறகு பதிவாகியுள்ள ஆக அதிக சிஓஇ கட்டணம் இதுவே. பெரிய, கூடுதல் ஆற்றலுடைய கார்களையும் மின்சார வாகனங்களையும் பதிவுசெய்ய ‘பி’ பிரிவு சிஓஇ பயன்படுத்தப்படுகிறது.
‘ஏ’ பிரிவுக்கான கட்டணம் $92,730லிருந்து 1.9 விழுக்காடு கூடி $94,502 ஆனது. 2025ல் இப்பிரிவில் இதுவரை பதிவாகியுள்ள ஆக அதிக சிஓஇ கட்டணம் இதுவே. சிறிய, குறைந்த ஆற்றலுடைய கார்களையும் மின்சார வாகனங்களையும் பதிவுசெய்ய பிரிவு சிஓஇ பயன்படுத்தப்படுகிறது.
பொதுப் பிரிவுக்கான (‘இ’ பிரிவு) கட்டணம், இரு வாரங்களுக்கு முன்பிருந்த $112,901லிருந்து 3.6 விழுக்காடு அதிகரித்து $116,991ஆகப் பதிவானது.
வர்த்தக வாகனங்களுக்கான (‘சி’ பிரிவு) கட்டணம் $67,001லிருந்து 4.6 விழுக்காடு உயர்ந்து $70,089 ஆனது.
மோட்டார்சைக்கிள்களுக்கான (‘டி’ பிரிவு) கட்டணம் $9,201லிருந்து 3.4 விழுக்காடு ஏற்றம் கண்டு $9,511ஆகப் பதிவானது.