வாகன உரிமைச் சான்றிதழுக்கான (சிஓஇ) புதன்கிழமை (மார்ச் 4) முடிவடைந்த ஏலத்தில், எல்லாப் பிரிவுகளிலும் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. குறிப்பாக, பெரிய கார்களுக்கான (‘பி’ பிரிவு) கட்டணம் 8.6 விழுக்காடு அதிகரித்து $114,002ஐ எட்டியது.
சிறிய, குறைந்த ஆற்றலுடைய கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்குமான (‘ஏ’ பிரிவு) சிஓஇ கட்டணம் 1.6 விழுக்காடு அதிகரித்து $108,220ஆகப் பதிவானது. பிப்ரவரி 20ஆம் தேதி நடந்த இதற்கு முந்திய ஏலத்தில் அக்கட்டணம் $106,501 ஆக இருந்தது.
கடந்த இரண்டு ஏலங்களில் குறைந்து வந்த பெரிய, கூடுதல் ஆற்றலுடைய கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்குமான (‘பி’ பிரிவு) சிஓஇ கட்டணம், $105,001லிருந்து 8.6 விழுக்காடு உயர்ந்து $114,002ஆக முடிவடைந்தது.
மோட்டார்சைக்கிள்களைத் தவிர மற்ற வகை வாகனங்களைப் பதிவுசெய்ய பயன்படுத்தப்படும் பொதுப் பிரிவில் (‘இ’ பிரிவு), கட்டணம் 1.8 விழுக்காடு உயர்ந்து $114,890 ஆனது.
வணிக வாகனங்களுக்கான ‘சி’ பிரிவில், கட்டணம் 1.3 விழுக்காடு உயர்ந்து $74,999லிருந்து $76,000ஆக அதிகரித்தது.
மோட்டார்சைக்கிள்களுக்கான ‘டி’ பிரிவில், சிஓஇ கட்டணம் $7,989லிருந்து 7.7 விழுக்காடு உயர்ந்து $8,602ஆகப் பதிவானது.

