பெரும்பாலான வாகனப் பிரிவுகளில் சிஓஇ எனப்படும் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் குறைந்துள்ளது.
மின்சார கார்களை உள்ளடக்கிய சிறிய, குறைந்த சக்திகொண்ட கார்களுக்கான ‘ஏ’ பிரிவில் சிஓஇ கட்டணம், இதற்கு முன்பு கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி பதிவானதைவிட 3.3 விழுக்காடு குறைந்து 105,413 வெள்ளியாகப் பதிவானது.
மின்சார கார்களை உள்ளடக்கிய பெரிய, கூடுதல் சக்திகொண்ட கார்களுக்கான ‘பி’ பிரிவில் சிஓஇ கட்டணம் 4.6 விழுக்காடு குறைந்து 129,890 வெள்ளியாகப் பதிவானது.
பொதுப் பிரிவான ‘இ’ பிரிவில் கட்டணம் 1.6 விழுக்காடு குறைந்து 123,000 வெள்ளியாகப் பதிவானது. இப்பிரிவில் மோட்டார்சைக்கிள்களைத் தவிர எல்லா வகையான வாகனங்களும் சேர்க்கப்படலாம். ஆனால், பொதுவாக பெரிய கார்கள்தான் இதன்கீழ் வரும்.
மோட்டார்சைக்கிள்களுக்கான ‘டி’ பிரிவில் சிஓஇ கட்டணம் ஐந்து விழுக்காடு குறைந்தது. நவம்பர் 19ஆம் தேதி பதிவான 8,729 வெள்ளியிலிருந்து 8,289 வெள்ளிக்குக் கட்டணம் குறைந்தது.
வர்த்தக வாகனங்களுக்கான ‘சி’ பிரிவில் மட்டும் சிஓஇ கட்டணம் சற்று அதிகரித்தது. இப்பிரிவில் கட்டணம் 0.1 விழுக்காடு கூடி 76,501 வெள்ளியாகப் பதிவானது.

