ஆகஸ்ட்-அக்டோபர் காலாண்டு சிஓஇ ஒதுக்கீடு 1.2% அதிகரிப்பு

ஆகஸ்ட்-அக்டோபர் காலாண்டு சிஓஇ ஒதுக்கீடு 1.2% அதிகரிப்பு

2 mins read
8324dbda-fca7-4213-9b4e-3f8a833d2385
ஆகஸ்ட் மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில், 5,864 ‘ஏ’ பிரிவு வாகன உரிமைச் சான்றிதழ்கள் கிடைக்கப்பெறும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ஆகஸ்ட் மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடையில், ஏலக் குத்தகைக்குக் கிடைக்கப்பெறும் வாகன உரிமைச் சான்றிதழ்களின் (சிஓஇ) எண்ணிக்கை 15,283 ஆக அதிகரிக்கும்.

கடந்த மே மாதத்திற்கும் ஜூலை மாதத்துக்கும் இடையில் கிடைக்கப்பெற்ற 15,104 சான்றிதழ்களைக் காட்டிலும் இது 1.2 விழுக்காடு அதிகம்.

அடுத்த மூன்று மாதங்களுக்கு 5,864 ‘ஏ’ பிரிவு வாகன உரிமைச் சான்றிதழ்கள் இருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

அது மே முதல் ஜூலை வரை கிடைக்கப்பெற்ற 5,775 சான்றிதழ்களைக் காட்டிலும் 1.5 விழுக்காடு அதிகம் என்று ஆணையம் கூறியது.

இந்தச் சான்றிதழ்கள் சிறிய, சக்தி குறைந்த கார்களையும் மின்சார வாகனங்களையும் பதிவுசெய்ய பயன்படுத்தப்படுகின்றன.

அதிகமான ‘ஏ’ பிரிவு கார்கள் பதிவு நீக்கம் செய்யப்பட்டதும், அதிகமான தற்காலிக வாகன உரிமைச் சான்றிதழ்கள் காலாவதியானதுமே அதிகரிப்புக்குக் காரணம்.

‘பி’ பிரிவு கார்களுக்கு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை 3,980 சான்றிதழ்கள் இருக்கும். தற்போதைய மூன்று மாதக் காலகட்டத்தில் இருப்பதைக் காட்டிலும், அது 36 அதிகம்.

வர்த்தக வாகனங்களுக்கான ஒதுக்கீடு 5.4 விழுக்காடு அதிகரித்து, 1,299ஆக இருக்கும்.

இது, மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை கிடைக்கப்பெற்ற 1,232 சான்றிதழ்களைக் காட்டிலும் 67 அதிகம்.

இதற்கிடையே, பொதுப் பிரிவில் வாகன உரிமைச் சான்றிதழ்களின் எண்ணிக்கை சற்று குறையும். அது 1.2 விழுக்காடு இறங்கி 1, 035ஆக இருக்கும்.

மோட்டார்சைக்கிள் பிரிவில், வாகன உரிமைச் சான்றிதழ்களின் எண்ணிக்கை மாற்றமின்றி, 3,105ஆக இருக்கும்.

புதிய ஒதுக்கீட்டு முறையிலான ஏலம் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்