உறவு முறிந்த பிறகும் வலுக்கட்டாயக் கட்டுப்பாடு பெரும்பாலும் தொடர்கிறது: சிங்கப்பூர் ஆய்வு

உறவு முறிந்த பிறகும் வலுக்கட்டாயக் கட்டுப்பாடு பெரும்பாலும் தொடர்கிறது: சிங்கப்பூர் ஆய்வு

கோப்புப்படம்: சாவ்பாவ்

25 Nov 2026 - 3:54 pm

2 mins read

வலுக்கட்டாயக் கட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட பலருக்கு, துன்புறுத்தல் நிறைந்த உறவிலிருந்து வெளியேறுவது என்பது அந்தத் துன்புறுத்தல் முடிவுக்கு வந்துவிட்டது என்பதைக் குறிப்பதில்லை.

சிலருக்குத் தங்கள் முன்னாள் துணைவர்களிடமிருந்து தொடர்ந்து வரும் அழைப்புகளாலும் குறுஞ்செய்திகளாலும் தொல்லை. மற்றவர்களுக்கோ ஜீவனாம்சத் தொகையை நிறுத்திவைத்தல், குழந்தைகளைத் தங்களுக்கு எதிராகப் பயன்படுத்துதல், விவாகரத்து நடவடிக்கைகளை இழுத்தடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் முன்னாள் வாழ்க்கைத் துணைவர்களின் தயவில் இருக்கவேண்டிய நிலை.

‘அவேர்’ (Aware) மகளிர் உரிமை அமைப்பு புதன்கிழமை (நவம்பர் 25) வெளியிட்ட 70 பக்க ஆய்வறிக்கையில், தங்களைத் துன்புறுத்தியவர்களிடமிருந்து விலக முயன்றவர்களில் 87 விழுக்காட்டினர், பிரிந்த பிறகும் தொடர்ந்து துன்புறுத்தலையும் வலுக்கட்டாயக் கட்டுப்பாட்டையும் அனுபவித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் வலுக்கட்டாயக் கட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுவந்த 44 பேரிடம் 2023, 2024ஆம் ஆண்டுகளில் நேர்காணல்கள் நடத்தப்பட்டன.

துன்புறுத்துபவர்கள் கையாளும் உத்திகள், பாதிக்கப்பட்டவர்கள் அந்தத் துன்புறுத்தலை அடையாளம் கண்டு அதிலிருந்து தப்பிப்பதில் ஏன் சிரமப்படுகிறார்கள், உதவி நாடுவதில் அவர்கள் எதிர்கொள்ளும் தடைகள் ஆகியவற்றை அந்த ஆய்வு ஆராய்ந்துள்ளது.

வலுக்கட்டாயக் கட்டுப்பாடு என்பது, ஒரு நபரின் சுதந்திரம், தன்னுரிமை, வளங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றைப் படிப்படியாகக் கட்டுப்படுத்துவதன் மூலம், துன்புறுத்துபவர் அந்நபரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யும் ஒரு தொடர்ச்சியான நடத்தை முறையைக் குறிக்கிறது.

தனித்தனியாக நிகழும் துன்புறுத்தல் சம்பவங்களைப் போல் அல்லாமல், இது பாதிக்கப்பட்டவர் சுயமாக முடிவெடுக்கும் உரிமையைக் கட்டங்கட்டமாகச் சிதைக்கும் தொடர்ச்சியான நடத்தைகளைக் குறிக்கிறது.

இவற்றில் தந்திரமான முறையில் நீண்டகாலத்திற்கு ஒருவரைக் கட்டுப்படுத்துவது, அச்சுறுத்தல், தனிமைப்படுத்துதல், நிதி சார்ந்த கட்டுப்பாடுகள், கண்காணிப்பு, அன்றாடச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை அடங்கும். நேர்காணல் செய்யப்பட்ட 44 பேரில், 38 பேர் உறவை முறித்துக் கொள்வது, விவாகரத்து நடவடிக்கைகளைத் தொடங்குவது, வீட்டைவிட்டு வெளியேறுவது ஆகியவற்றின் மூலம் பிரிந்து செல்ல முயன்றுள்ளதாக அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

இருப்பினும், அவர்களில் 33 பேர் தொடர்ந்து துன்புறுத்தலை அனுபவித்ததாகவும் குறிப்பாகக் குழந்தைகளைக் கவனிப்பதற்காக வேலையை விட்ட நேரங்களில், தாங்கள் எவ்வாறு கடுமையான நிதி சார்ந்த கட்டுப்பாட்டிற்கு உள்ளாக்கப்பட்டதைச் சிலர் விவரித்ததாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

துன்புறுத்துபவர்கள் ஜீவனாம்சத் தொகையை நிறுத்தி வைப்பார்கள் அல்லது தாமதப்படுத்துவார்கள், தங்கள் குழந்தைகளின் செலவுகளை ஏற்க மறுப்பார்கள், அல்லது வீட்டுக் கட்டணங்களைச் செலுத்தத் தவறுவார்கள் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்