கவனமின்றி லாரியை ஓட்டியதால் சுவர் விழுந்து ஆடவர் மாண்ட சம்பவத்தின் தொடர்பில் அசோகன் சந்தோஷ்சிவம் எனும் ஆடவருக்கு எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவருக்கு $800 அபராதமும் விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து எட்டு ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12), அசோகன் கவனமின்றியும் முறையான உரிமமின்றியும் வாகனம் ஓட்டியதை ஒப்புக்கொண்டார்.
சம்பவம், கடந்த ஆண்டு (2024) மே மாதம் 12ஆம் தேதி துவாசில் டெக் பார்க் கிரசென்ட்டில் உள்ள தங்குமிடத்தில் நடந்தது.
கட்டுமான நிறுவனமொன்றில் ஓட்டுநராகப் பணிபுரிந்த 24 வயது அசோகன், அன்று பின்னிரவு சுமார் 2.50 மணிக்கு வேறு இருவருடன் உணவு வாங்குவதற்காக உணவுக்கடைக்குச் சென்றார். கடை மூடியிருந்ததால் மீண்டும் தங்குமிடத்திற்கு அவர்கள் திரும்பினர்.
லாரி ஓட்டுவதற்குத் தேவையான உரிமம் அசோகனிடம் இல்லை. தங்குமிடத்தை அடைந்தவுடன் லாரியைப் பின்பக்கமாக ஓட்டியபோது அவர் கதவை இடித்தார். அதனையொட்டியிருந்த சுவர் நொறுங்கிவிழுந்தது. அந்நேரத்தில் அங்கு நடந்துசென்றுகொண்டிருந்த ஆடவர் அதில் சிக்கி மரணமடைந்தார்.
மாண்டவர், அசோகனுடன் வேலை செய்த கட்டுமான ஊழியர் 34 வயது ஸாவ் லின் டுன். மியன்மாரைச் சேர்ந்த அவரின் மரணத்துக்குத் தலையிலும் கழுத்திலும் ஏற்பட்ட காயங்களே காரணம் என்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.
சம்பவத்தில் மேலும் ஒருவருக்குக் காலில் காயம் ஏற்பட்டது.

