எல்லை தாண்டிய டாக்சி பயண முன்பதிவுச் சேவை தொடக்கம்

2 mins read
ca468b7b-b852-4e7e-bb36-738a541f433a
பெரும்பாலான பயணங்களுக்கு 80 வெள்ளி நிலையான கட்டணம் வசூலிக்கப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் பாருவிற்குச் செல்லும் பயணிகள் செப்டம்பர் 25 முதல் கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனத்தின் நேரடித் தொலைபேசி எண்வழி சிங்கப்பூரின் எந்த இடத்திலிருந்தும் எல்லை தாண்டிய பயணத்திற்கு முன்பதிவு செய்யலாம்.

கம்ஃபர்ட் டெல்குரோ வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 18) இந்தப் புதிய திட்டத்தைத் தனது ஃபேஸ்புக் பக்கம் வழியாக அறிவித்தது. பெரும்பாலான பயணங்களுக்கு 80 வெள்ளி நிலையான கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், பான் சான் தெரு டாக்சி நிலையத்திலிருந்து புறப்படும் பயணங்களுக்கான கட்டணம் $60.

அத்துடன், விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணங்களுக்கு $120 கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்குப் பதிலளித்த கம்ஃபர்ட் டெல்குரோ குழும செய்தித் தொடர்பாளர், எல்லை தாண்டிய டாக்சி உரிமம் பெற்றுள்ள தனது 90 டாக்சி ஓட்டுநர்களுமே இந்தச் சேவையை வழங்க இயலும் என்று கூறினார்.

வாடிக்கையாளர்கள் உடனடியாக முன்பதிவு செய்ய 6552-1111 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த எண்ணின்வழி உடனடியாக அல்லது 24 மணி நேரத்திற்கு முன்னரே முன்பதிவு செய்யலாம் என செய்தித் தொடர்பாளர் கூறினார். ஜோகூர் பாருவில் உள்ள லார்க்கின் சென்ட்ரல் டெர்மினலில் டாக்சிகள் வாடிக்கையாளர்களை இறக்கிவிடலாம்.

“எல்லை தாண்டிய பயணங்களுக்கு தேவை அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம். பயணிகளுக்கு அதிக பயணத் தெரிவுகளை வழங்குவதிலும் எங்கள் டாக்சி ஓட்டுநர்களுக்கு அதிக வருவாய் ஈட்டும் வாய்ப்புகளை வழங்குவதிலும் உறுதியாக இருக்கிறோம்,” என்று குழுமம் தெரிவித்தது. 

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே எல்லை தாண்டிய சேவைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெறும் வேளையில் புதிய முயற்சி எடுக்கப்படுகிறது. அத்துடன், சட்டவிரோதமான எல்லை தாண்டிய போக்குவரத்துச் சேவைகளைக் கையாளும் முயற்சியாகவும் இந்நடவடிக்கை உள்ளது.

செப்டம்பர் 2ல் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், எல்லை தாண்டிய சேவைகளை மேம்படுத்துவதற்காக அதிக பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களை உறுதிசெய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் ஒப்புக்கொண்டது.

தற்போதுள்ள எல்லை தாண்டிய டாக்சி திட்டத்தின்கீழ், இரு நாடுகளிலிருந்து தலா 200 டாக்சிகள் வரை சிங்கப்பூர் - ஜோகூர் பாரு இடையே பயணிகளை ஏற்றிச் செல்ல உரிமம் பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்