‘கம்ஃபர்ட்டெல்குரோ’ நிறுவனம் சீன கார் உற்பத்தி நிறுவனமான ‘பிஒய்டி’யின் புதிய மின்சார, ஹைப்ரிட் வாகனங்களில் $10 மில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்கிறது.
‘கம்ஃபர்ட்டெல்குரோ’ தனது தனியார் வாடகை வாகனப் பிரிவை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் திட்டம் கொண்டுள்ளது.
புதிய வாகனங்கள் அதன் ‘ஸிக்’ வாடகை வாகனச் சேவைத் தளத்தில் கட்டங்கட்டமாகச் சேர்க்கப்படும் என்றும் ஓட்டுநர்கள் வரும் மாதங்களில் அந்த வாகனங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) வெளியிட்ட அறிக்கையில் ‘கம்ஃபர்ட்டெல்குரோ’ தெரிவித்தது.
‘ஸிக்’ தனியார் வாடகைத் தொழிலின் விரிவாக்கத்திற்கு இடையே, அந்தப் புதிய வாகனங்கள் குறித்த செய்தி வந்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டில், ‘ஸிக்’ தளத்தின் தனியார் வாடகை வாகன ஓட்டுநர்களின் எண்ணிக்கை 28 விழுக்காடு அதிகரித்து, தற்போது 4,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் அந்தச் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்தப் புதிய வாகனங்கள் தனியார் வாடகை ஓட்டுநர்களுக்குக் கூடுதல் தெரிவுகளை வழங்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அவற்றில் ‘பிஒய்டி சீல் 6 டிஎம்-ஐ’ என்ற ஹைப்ரிட் வாகனமும் ‘பிஒய்டி எம்6’ என்ற மின்சார வாகனமும் அடங்கும். அந்த வாகனங்கள் ‘வான்டேஜ் ஆட்டோமோட்டிவ்’ எனும் பிஒய்டி வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகிப்பு நிறுவனத்தால் சிங்கப்பூரில் வழங்கப்படுகின்றன.
புதிய வாகனங்களுக்குப் பதிவுசெய்யும் ஓட்டுநர்கள், ‘கம்ஃபர்ட்டெல்குரோ’வின் துணை நிறுவனமான ‘சிடிஜி எனர்ஜி’ மூலம் சலுகைக் கட்டணத்தில் மின்னூட்டம் செய்துகொள்ளமுடியும்.
சிங்கப்பூர் முழுவதிலும் உள்ள ‘கம்ஃபர்ட்டெல்குரோ எஞ்ஜினியரிங்’ கட்டமைப்பின் வாகனப் பணிமனைகளிலிருந்து பராமரிப்பு ஆதரவு வழங்கப்படும்.
அந்த முதலீடு, டாக்சிகளை முதன்மையாகக் கொண்ட கட்டமைப்பிலிருந்து, டாக்சிகள், தனியார் வாடகை வாகனங்கள், வாடகை வாகனச் சேவைத் தளம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு தளமாக மாறும் ‘ஸிக்’கின் விரிவான மாற்றத்தின் ஒரு பகுதியாகும்.


