வாகன ஓட்டுநர் பயிற்சியில் ‘கம்ஃபர்ட்டெல்குரோ’ $200 மி. முதலீடு

வாகன ஓட்டுநர் பயிற்சியில் ‘கம்ஃபர்ட்டெல்குரோ’ $200 மி. முதலீடு

2 mins read
5dd3be9c-965c-4ee8-a1c5-76d1e97f8283
‘கம்ஃபர்ட்டெல்குரோ’ நிறுவனத்தின் முதலீட்டில் ஐந்தில் ஒரு பகுதி, சுவா சூ காங்கில் அமையவிருக்கும் புதிய வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிக்குச் செல்லும். - படம்: கம்ஃபர்ட்டெல்குரோ

சிங்கப்பூரில் வாகன ஓட்டுநர் பயிற்சித் துறையை மேம்படுத்த ‘கம்ஃபர்ட்டெல்குரோ’ நிறுவனம் அடுத்த 30 ஆண்டுகளில் $200 மில்லியனுக்கும் மேல் முதலீடு செய்யவிருக்கிறது.

சுவா சூ காங்கில் கட்டப்படவிருக்கும் புதிய வாகன ஓட்டுநர் பயிற்சி நிலையத்தில், மனிதப் பயிற்றுவிப்பாளர்களுக்குப் பதிலாகத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி அடிப்படையிலான பயிற்சிக்குரிய தேவையை ஈடுசெய்யவும் தனியார் பயிற்றுவிப்பாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் புதிய பயிற்சி வசதிகள், தொழில்நுட்பங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றில் முதலீடுசெய்யத் திட்டமிட்டுள்ளதாக ‘கம்ஃபர்ட்டெல்குரோ’ புதன்கிழமை (மார்ச் 11) கூறியது.

அதன் முதலீட்டில் ஐந்தில் ஒரு பகுதி, அதாவது $38 மில்லியன், கிராஞ்சி முகாம் மூன்றுக்கு அருகே, லோரோங் பிஸ்தாரியில் உள்ள நிலப்பரப்புக்கான ஏலத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.

2030ஆம் ஆண்டுக்குள், புக்கிட் பாத்தோக் வாகன ஓட்டுநர் பயிற்சி நிலையம் மூடப்படும்.

24,890 சதுர மீட்டர் பரப்பளவிலான அந்த சுவா சூ காங் நிலப்பகுதி, சென்ற ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி பொது ஏலத்திற்கு விடப்பட்டது.

இந்நிலையில், பல மாடிகளுடன் 72,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படவிருக்கும் புதிய வாகன ஓட்டுநர் பயிற்சி நிலையத்தில், எதிர்கால ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளிக்க, பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைக் கட்டங்கட்டமாகத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

உணர்கருவிகள், கேமராக்கள், நிகழ்நேரக் கண்காணிப்பு, மதிப்பீட்டின்போது செயற்கை நுண்ணறிவு ஆகியவை பயன்படுத்தப்படும் என்று ‘கம்ஃபர்ட்டெல்குரோ’ கூறியது. அவை மேலும் பாரபட்சமற்ற, சுயமான பயிற்சிக்கு வகைசெய்யும் என்றும் அது தெரிவித்தது.

தொழில்நுட்பம் மூலம், மனிதப் பயிற்றுவிப்பாளர்களைச் சார்ந்திருக்கும் தேவை குறையும் என்றும் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் என்றும் ‘கம்ஃபர்ட்டெல்குரோ’ கூறியது.

தொழில்நுட்பப் பயன்பாடு, சிங்கப்பூரில் சாலைகள் மேலும் பாதுகாப்பாக இருப்பதற்குப் பங்களிக்கும் அதே வேளையில், கூடுதல் செயல்திறன்மிக்க, பாரபட்சமற்ற மதிப்பீடுகள் மூலம் பயிற்சி பெறுவோருக்குப் பலன் அளிக்கும் என்று கம்ஃபர்ட்டெல்குரோ வாகனப் பயிற்சி நிலையத்தின் தலைமை நிர்வாகி வின்சன்ட் டான் தெரிவித்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டில் ‘சிங்கப்பூர் சேஃப்டி டிரைவிங் சென்டர்’ (எஸ்எஸ்டிசி) திறக்கப்பட்டது. அதன் பிறகு கட்டப்படவிருக்கும் இரண்டாவது அடுக்குமாடி வாகன ஓட்டுநர் பயிற்சி நிலையம் சுவா சூ காங்கில் அமையவிருக்கிறது.

அங்கு கனரக வாகனங்களை ஓட்டத் தேவைப்படும் 4, 5 பிரிவு ஓட்டுநர் உரிமங்களைப் பெறமுடியும். தற்போது, அந்த உரிமங்களை ‘எஸ்எஸ்டிசி’யில் மட்டுமே பெறமுடியும்.

குறிப்புச் சொற்கள்