போக்குவரத்து நிறுவனமான கம்ஃபர்ட்டெல்குரோவும் அதன் துணை நிறுவனமான எஸ்பிஎஸ் டிரான்சிட்டும் அவற்றின் பிரேடல் சாலை தலைமையகத்திலிருந்து வெளியேறுகின்றன.
2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவ்விடத்துக்கான குத்தகைக்காலம் முடிவுக்கு வருவதே இதற்குக் காரணம்.
பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அக்டோபர் மாதத்திலிருந்து படிப்படியாக கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனத்தின் மற்ற இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவர்.
அவர்களது பணியைப் பொறுத்து அவர்களது வேலையிடம் நிர்ணயிக்கப்படும்.
கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து பணிமனைகள் பிடோக், புக்கிட் பாத்தோக் ஆகிய வட்டாரங்களில் உள்ளன.
ஊபி, லோயாங், சினோக்கோ, பாண்டான் சாலை ஆகிய இடங்களில் வாகனப் பட்டறைகள் உள்ளன.
ஈசூன், சாங்கி, சின் மிங் ஆகிய வட்டாரங்களில் வாகன ஆய்வு நிலையங்கள் உள்ளன.
பிரேடல் சாலை தலைமையகத்தின் குத்தகைக்காலம் நீட்டிக்கப்படாத அல்லது புதுப்பிக்கப்படாததற்கான காரணத்தை கம்ஃபர்ட்டெல்குரோ தெரிவிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
அதன் புதிய தலைமையகம் இனி எங்கு இருக்கும் என்ற விவரங்களையும் அது வெளியிடவில்லை.
கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் 1980ஆம் ஆண்டிலிருந்து பிரேடல் வட்டாரத்தில் செயல்பட்டு வருவதாக அதன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

