தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டாக்சி முன்பதிவுகளை எளிமையாக்கும் கம்ஃபர்ட்டெல்குரோ

2 mins read
18800e75-76f3-4fd9-b1c0-4c3c1e51a613
‘ஸிக்’ செயலியில் கூடுதல் வசதிகளையும் கம்ஃபர்ட்டெல்குரோ செய்துவருவதாக அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி மைக்கல் ஹுவாங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தடுமாறுபவர்களுக்கு டாக்சி முன்பதிவுகளை எளிமையாக்கும் விதமாக கம்ஃபர்ட்டெல்குரோ புதிய சேவைகளை அறிமுகம் செய்யவுள்ளது.

இவ்வாண்டு இறுதிக்குள் கியூஆர் குறியீடுகளை வருடி கம்ஃபர்ட்டெல்குரோ வாடிக்கையாளர்கள் டாக்சி முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

செயலி உள்ளிட்ட மின்னிலக்கக் கட்டமைப்புகளை மூத்தோர் பயன்படுத்தத் தடுமாறும்போது கியூஆர் குறியீடுகளைப் பயன்படுத்தி டாக்சிகளை அவர்கள் முன்பதிவு செய்யலாம்.

ஒவ்வொரு முறையும் கியூஆர் குறியீட்டை வருடும்போது அது பயணத்தைத் தொடங்கும் இடத்தைத் தானாக நிரப்பிக்கொள்ளும். இது மூத்தோருக்கு பேருதவியாக அமையும்.

போட்டிமிக்க சூழலில் தனது டாக்சி தொழிலைத் தொடர்ந்து மேம்படுத்த கம்ஃபர்ட்டெல்குரோ நடவடிக்கை எடுத்து வருகிறது.

தனியார் வாடகை கார் சேவைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் டாக்சிகளை நாடுவோர் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்குகிறது.

இந்நிலையில், ஆறு இருக்கைகள் கொண்ட டாக்சிகளை சேவையில் அமர்த்த கம்ஃபர்ட்டெல்குரோ திட்டமிட்டுள்ளது.

பெரிய குடும்பங்கள், பெரு நிறுவன ஊழியர்கள் ஆகியோரைக் குறிவைத்து இந்தச் சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.

தனது ‘ஸிக்’ (Zig) செயலியில் கூடுதல் வசதிகளையும் கம்ஃபர்ட்டெல்குரோ செய்துவருவதாக அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி மைக்கல் ஹுவாங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் செல்ல விரும்பும் வாடிக்கையாளர்கள் ஸிக் செயலிமூலம் எல்லை தாண்டிய டாக்சி சேவைகளைப் பெறமுடியும். அல்லது கம்ஃபர்ட்டெல்குரோவின் உதவி எண்ணுக்கு அழைத்தும் எல்லை கடந்து செல்லும் பயணங்களுக்கு டாக்சிகளை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யலாம்.

பயணங்களை ரத்து செய்வது, காத்திருப்பு நேரத்திற்கான கட்டணம் உள்ளிட்ட அம்சங்களிலும் கம்ஃபர்ட்டெல்குரோ கவனம் செலுத்துவதாக திரு மைக்கல் குறிப்பிட்டார்.

தனியார் வாடகை கார் சேவைகள் மட்டுமே போதாது, வாடிக்கையாளர்கள் டாக்சி சேவைகளையும் தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என்று திரு மைக்கல் நம்பிக்கைத் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் 2014ஆம் ஆண்டு காலகட்டத்தில் கிட்டத்தட்ட 29,000 டாக்சிகள் சேவையில் இருந்தன. ஆனால், இப்போது அதன் எண்ணிக்கை ஏறத்தாழ 12,000ஆக குறைந்துள்ளது.

தற்போது சிங்கப்பூரில் 61,000 தனியார் வாடகை கார்கள் சேவையில் உள்ளன.

குறிப்புச் சொற்கள்