சிங்கப்பூரின் ‘கம்ஃபர்ட்டெல்குரோ’ போக்குவரத்து நிறுவனம் ஆஸ்திரேலியாவில் ரயில் போக்குவரத்து நடத்த 2027ஆம் ஆண்டு முயற்சி மேற்கொள்ள உள்ளது.
மெல்பர்ன் மெட்ரோ ரயில் போக்குவரத்தை தற்போது நடத்தி வரும் ‘மெட்ரோ டிரெய்ன்ஸ் மெல்பர்ன்’ (MTM) நிறுவனத்தின் குத்தகை காலாவதி ஆன பின்னர் அந்தக் குத்தகையைப் பெற ‘கம்ஃபர்ட்டெல்குரோ’ விண்ணப்பிக்கும்.
இதனை தனது லிங்கிட்இன் தளத்தில் ‘கம்ஃபர்ட்டெல்குரோ’ திங்கட்கிழமை (மே 26) அறிவித்தது.
ஆஸ்திரேலிய ரயில் தயாரிப்பாளரான யுஜிஎல் (UGL), ஜப்பானின் ஈஸ்ட் ஜப்பான் ரயில்வே, ஜப்பானின் முதலீட்டு நிறுவனம் மருபேனி கார்ப் ஆகியவற்றின் கூட்டமைப்பு எடுத்த முடிவின் ஒருபகுதியாக தனது ஏலக்குத்தகை அமையும் என்றது ‘கம்ஃபர்ட்டெல்குரோ’.
மெல்பர்ன் மெட்ரோ ரயில் போக்குவரத்தை நடத்தவும் பராமரிக்கவும் ஏலக்குத்தகைக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில், அந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஏலத்தில் பங்கேற்பதற்கான ஆயத்த முயற்சிகளை மேற்கொள்ள அவ்வாறு செய்யப்பட்டது.
சுவீடனின் ஸ்டாக்ஹோம் மெட்ரோவுக்குச் சொந்தமான மூன்று ரயில் தடங்களை நடத்தவும் பராமரிக்கவும் 11 ஆண்டுகாலக் குத்தகையை ‘கம்ஃபர்ட்டெல்குரோ’ கடந்த ஆண்டு ஜனவரியில் பெற்றது.
அதற்கு முன்னர், பாரிஸ் லை 15 என்னும் ரயில் போக்குவரத்தின் தென்பகுதியை நடத்துவதற்கான ஆறாண்டு குத்தகையை 2023 ஜூலையில் அது பெற்றது.
அதன் தொடர்ச்சியாக மெல்பர்ன் ரயில் போக்குவரத்திலும் கால்பதிக்க ‘கம்ஃபர்ட்டெல்குரோ’ முயன்று வருகிறது.

